நிறுத்தாமல் எகிறி அடிக்கும் இஸ்ரேல்.. காசாவில் தொடர்ந்து கேட்கும் மரண ஓலம்..!
காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், கடந்த 48 மணி நேரத்தில் 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.
பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் 1,139 இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்ட நிலையில் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான பிரச்சனை போராக மாறியது. இந்த சம்பவத்திற்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் இந்த போரில், காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் போர் விமானங்களும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
250 பேரை பிணைக்கைதிகளாக பயங்கரவாதிகள் பிடித்து சென்றனர். பதிலடி கொடுக்கவும், பிணைக்கைதிகளை மீட்கவும் தான் காசாவில் போரை துவங்கியது இஸ்ரேல். டிரம்ப் அதிபரானதும் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஏராளமான பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அனைத்து பயங்கரவாதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிக்க ஹமாஸ் மறுத்ததால் 60 நாட்களில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இதனால் தான் 2 மாதம் முன்பு மீண்டும் காசாவில் போரை துவங்கியது இஸ்ரேல்.
இதையும் படிங்க: இஸ்ரேலை சமாதனப்படுத்திய அமெரிக்கா.. காசா மக்களுக்கு ஆறுதல் நிம்மதி.. போர் நிறுத்தம் சாத்தியமா?
இந்த முறை ஹமாஸ் பயங்கரவாதிகளை அடியோடு விரட்டி விட்டு மொத்த காசாவையும் கைப்பற்றும் நோக்குடன் தீவிர போரில் இறங்கியது. முன் எப்போதும் இல்லாத அளவு காசாவில் தரை வழியாகவும், வான் வழியாகவும் தீவிர தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் பிணைக் கைதிகள் சிலரை ஹமாஸ் தீவிரவாதிகள் இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களை விடுதலை செய்துவிட்டு இருதரப்பும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். காசாவில் 60 நாள் சண்டை நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இதை ஹமாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் கடந்த கூறினார். ஆனால், ஹமாஸ் அமைப்பினர் இதை ஏற்றுக்கொள்ளாமல், உண்மையான சண்டை நிறுத்தத்துக்கு இது வழிவகுக்குமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் காசாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தொடர்கிறது.
இந்நிலையில் காசாவின் முவாசி பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று அதிகாலை அங்குள்ள கூடாரங்களில் வான்வழி தாக்குதல் நடத்தியது. மேலும் காசாவில் பள்ளி கட்டிடம் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. காசாவில் அறக்கட்டளை உதவி மையங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் பெற காத்திருந்த பலர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தனர்.
இதன்மூலம் கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேலியப் படைகளால் 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வரும் போரில் காசாவில் இதுவரை 57 ஆயிரத்து 130 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 592 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடும்பத்துடன் கொல்லப்பட்ட ஹமாஸ் முக்கிய தலைவர்.. காஸாவில் இஸ்ரேல் நடத்திய வெறியாட்டம்..!