சொன்னதை செய்து காட்டிய மஸ்க்! புலம்பித் தவிக்கும் ட்ரம்ப்.. மூன்றாவது கட்சி சறுக்குமா? சாதிக்குமா?
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க். அமெரிக்க தொழில் அதிபரான மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதளம் என பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். 2024ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு நிதி உதவியும், பிரசாரமும் செய்து உதவினார்.
டிரம்ப் அதிபர் ஆனவுடன், அவரது நிர்வாகத்தில் எலான் மஸ்க்கிற்கு, அரசு செயல்திறன் துறை (Department of Government Efficiency - DOGE) தலைவர் பதவி கொடுத்தார். சுமூகமாக சென்ற இருவரது உறவு, டிரம்ப் கொண்டு வந்த ஒரு சட்ட மசோதாவால் சிக்கலை சந்தித்தது. இருவரும் ஒருவரை ஒருவர் வசைபாடிக்கொண்டனர்.
புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த மஸ்க், மக்கள் ஆதரவையும் கோரினார். அமெரிக்கர்கள் பலர் அவரது புதிய கட்சி ஆசைக்கு ஆதரவு தந்தனர். மகிழ்ச்சி அடைந்த எலான் மஸ்க் இன்று, “அமெரிக்கா கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். இது குறித்து அவர் கூறியது: நடுத்தர மக்களில் 80 சதவீதம் பேர் புதிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்கர்கள் உண்மையான அரசியல் மாற்றத்தை விரும்புகின்றனர்.
இதையும் படிங்க: இஸ்ரேல் - ஈரான் போருக்கு பின் இதுவே முதன்முறை.. மக்கள் மத்தியில் தோன்றிய காமெனி..
வீண் செலவு மற்றும் ஊழலால் நாடு திவாலாகிறது. இந்த சூழலில் நாம் ஜனநாயகத்தில் வாழவில்லை. மாறாக ஒரு கட்சி முறையில் வாழ்கிறோம். இன்று அமெரிக்கா கட்சி, உங்களுடைய சுதந்திரத்தை உங்களுக்கே திருப்பித் தருவதற்காக தொடங்கப்பட்டு இருக்கிறது என்று எலான் மஸ்க் தெரிவித்தார். ஜனநாயக கட்சியும், குடியரசு கட்சியும் அமெரிக்காவில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
மூன்றாவது கட்சிக்கு மக்கள் இதுவரை பெரிய அளவில் ஆதரவு கொடுத்தது இல்லை. எலான் மஸ்க் ஆரம்பித்துள்ள புதிய கட்சி எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை. அடுத்தாண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள இடைத் தேர்தல்களில் எலான் மஸ்க் கட்சி போட்டியிடக் கூடும். அதன் பிறகுதான் அதனுடைய வலிமை தெரியவரும் என்கிறார்கள். இதனிடையே அமெரிக்காவில் 3வது கட்சி குழப்பத்தையே அதிகரிக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் இரு கட்சி முறை தான் இருந்து வருகிறது. 3வது கட்சியை தொடங்குவது குழப்பத்தை அதிகரிக்கும். மூன்றாவது கட்சியைத் தொடங்குவது அபத்தமானது. குடியரசுக் கட்சியுடன் நாங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளோம். ஜனநாயகக் கட்சியினர் தங்கள் வழியைத் தவறவிட்டனர்.
ஆனால் அது எப்போதும் இரு கட்சி முறையாகவே இருந்து வருகிறது. மூன்றாம் கட்சிகள் ஒருபோதும் வேலை செய்யவில்லை. கட்சி தொடங்குவது எலான் மஸ்கிற்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் அது அபத்தமானது என்று நான் நினைக்கிறேன். அமெரிக்காவில் அவர்கள் ஒருபோதும் வெற்றிபெறவில்லை என்ற உண்மை இருந்தபோதிலும், அவர் ஒரு மூன்றாவது அரசியல் கட்சியைத் தொடங்க விரும்புகிறார்.
நம்பிக்கையையும், மனதையும் இழந்த தீவிர இடது ஜனநாயகக் கட்சியினருடன் நமக்கு அது போதுமானது. மறுபுறம், குடியரசுக் கட்சியினர் ஒரு சீராக இயங்கும் இயந்திரம், அவர்கள் நம் நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய மசோதாவை நிறைவேற்றினர் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கெடு விதிக்கும் ட்ரம்ப்.. அடங்கிப்போவாரா மோடி! ராகுல்காந்தி சவாலால் ஆட்டம் காணும் பாஜக!