'Nicest judge in the world'.. நீதிபதி ஃபிராங்க் கேப்ரியோ காலமானார்..!!
தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் உலகெங்கும் பிரபலமான அமெரிக்காவைச் சேர்ந்த நீதிபதி ஃபிராங்க் கேப்ரியோ காலமானார்.
அமெரிக்காவின் ரோட் ஐலேண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முனிசிபல் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி, உலகளவில் “மிகவும் கனிவான நீதிபதி” என்று புகழப்பட்ட ஃபிராங்க் கேப்ரியோ (வயது 88) கணையப் புற்றுநோயுடனான நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காலமானார். அவரது மறைவு அவரது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் உறுதிப்படுத்தப்பட்டது, இது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
கேப்ரியோ 1985ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை பிராவிடன்ஸ் முனிசிபல் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார். அவரது நீதிமன்ற அறையில் பதிவு செய்யப்பட்ட “Caught in Providence” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி, அவரது மனிதாபிமான அணுகுமுறை மற்றும் நகைச்சுவையால் உலகளவில் புகழ் பெற்றது.
இதையும் படிங்க: ஜார்க்கண்ட் Ex. முதலமைச்சர் சிபு சோரன் மறைவு.. நேரில் சென்று பிரதமர் மோடி அஞ்சலி..!
இந்நிகழ்ச்சியின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றன, குறிப்பாக அவர் குழந்தைகளை நீதிமன்றத்தில் அழைத்து பெற்றோரின் வழக்குகளில் தீர்ப்பு வழங்கச் செய்த காட்சிகள் மிகவும் பிரபலமடைந்தன.
இத்தாலிய-அமெரிக்க குடும்பத்தில் பிறந்த கேப்ரியோ, எளிய பின்னணியில் இருந்து உயர்ந்தவர். பிராவிடன்ஸ் கல்லூரியில் பட்டம் பெற்று, சஃபோக் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார். 2023 இல் கணையப் புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு, அவர் தனது சிகிச்சை பயணத்தை பகிர்ந்து, ரசிகர்களிடம் பிரார்த்தனைகளைக் கோரினார். மேலும் அவரது இறுதி இன்ஸ்டாகிராம் பதிவில், மருத்துவமனையில் இருந்து மீண்டும் பிரார்த்தனைகளைக் கேட்டிருந்தார்.
கேப்ரியோ, தனது மனைவி ஜாய்ஸ், ஐந்து குழந்தைகள், ஏழு பேரக்குழந்தைகள், 2 பூட்டப்பிள்ளை ஆகியோரை விட்டுச் சென்றார். ரோட் ஐலேண்ட் ஆளுநர் டான் மெக்கீ, அவரை “ரோட் ஐலேண்டின் பொக்கிஷம்” என்று கௌரவித்து, மாநிலக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட உத்தரவிட்டார்.
கேப்ரியோவின் மனிதநேயம், நீதியை இரக்கத்துடன் வழங்கிய பாங்கு, உலகெங்கிலும் உள்ள மக்களை ஊக்குவித்தது. அவரது மறைவு, நீதி மற்றும் இரக்கத்தின் சின்னமாக விளங்கிய ஒரு மாமனிதரின் இழப்பை உணர்த்துகிறது.
இதையும் படிங்க: சென்னை மக்களே ரெடியா?... நாளை இங்க எல்லாம் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடக்கப் போகுது...!