#karurstampede: நான் இருக்கேன்... கவலைப்படாதீங்க! ஆறுதல் கூறி நிதியுதவி அளித்த செந்தில் பாலாஜி...!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நிதி உதவி வழங்கினார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல்களை நோக்கி அரசியல் களமிறங்கிய விஜய், த.வெ.க. என்ற பெயரில் தனது கட்சியைப் பதிவு செய்து, பரப்புரைப் பயணங்களைத் தொடங்கினார். செப்டம்பர் 13 அன்று தொடங்கிய இந்தப் பயணம், சனிக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கான பயணம் செப்டம்பர் 27 அன்று தொடங்கியது.
கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற பொது மேடை நிகழ்ச்சி, விஜய்யின் ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களின் ஆர்வத்தால் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது.விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் உற்சாக சுற்றுப் பயணம் அனைவரையும் சோக கடலில் ஆழ்த்தியது.
கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கும் தலா 10 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 100க்கும் மேற்பட்டோருக்கு தலா 1 லட்சம் ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இதையும் படிங்க: கரூர் துயரச் சம்பவம்: நிர்வாக அலட்சியமே முழு காரணம்.. பாஜக எம்.பி.க்கள் குழு அறிக்கை?
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நிதியுதவி வழங்கினார். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது கரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சோக சம்பவம்.. இன்று கரூர் செல்கிறார் கமல்ஹாசன்..!!