யார் மீதும் பழி போடாதீங்க…! மக்களின் பாதுகாப்பு முக்கியம்… நீதிமன்றம் திட்டவட்டம்…!
கரூர் சம்பவத்தில் யார் மீதும் குற்றம் சுமத்த வேண்டாம் என்றும் மக்கள் நலனை முக்கியம் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் இன்று விசாரணைக்கு வந்தது. கட்சிக் கூட்டங்களுக்கு உரிய விதிமுறைகளை வகுக்க கோரிய மனு முதலில் விசாரிக்கப்பட்டது . ஒவ்வொரு மனுக்களும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
என்னென்ன மனுக்கள் என அரசு தரப்பில் தற்போது விளக்கப்பட்டது. அப்போது தமிழக அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்விகளை முன் வைத்தது. நெடுஞ்சாலைகளில் பரப்புரைக்கு அனுமதி வழங்கப்பட்டது ஏன் என்றும், தேசிய, மாநில நெடுஞ்சாலை மக்கள் பயணிக்க தானே எனவும் கேள்வி எழுப்பினர். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார கூட்டத்திற்கு வாடகை வசூலிக்கப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
தமிழக வெற்றி கழக பிரச்சாரக் கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட இடம் நெடுஞ்சாலை அல்ல என்றும் சாலையின் ஒரு புறத்தில் மட்டுமே பரப்புரைக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் தமிழக அரசின் தரப்பில் விளக்கப்பட்டது. விதிமுறைகள் வகுக்கும் வரை நெடுஞ்சாலைகளில் எந்த கட்சிக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய கரூர் சம்பவம்... மதுரை கிளையில் மனுக்கள் மீதான விசாரணை தொடக்கம்...!
அப்போது, பொதுக்கூட்டத்திற்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு இந்த உத்தரவு பொருந்தாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மக்களுக்கு குடிநீர், மருத்துவ உதவிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் விதிமுறைகள் வகுக்கக் கூடிய மூன்று மனுக்களுக்கும் ஒன்றாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் கீழ் உள்ள மனுக்களோடு இதனை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும் யார் மீதும் குற்றம் சுமத்த வேண்டாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரூரில் தொங்கியபடி மக்களைக் காப்பாற்றிய தொண்டர்... வெளியாகும் அடுத்தடுத்த வீடியோ காட்சிகள்...!