2100-க்குள் உலகமே அழிந்து விடும்? மனித குலத்துக்கு பேராபத்து? விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டிய 17 அதிர்ச்சிக் காரணிகள்!
உணவு உற்பத்தி சரிவடைந்தால், பல நாடுகளில் கடுமையான உணவுப் பற்றாக்குறையும் பஞ்சமும் ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் தாக்கம் ஒரு நாட்டுடன் முடிந்துவிடாமல் உலகம் முழுவதும் பரவக்கூடும்.
பெர்லின்: செயற்கை நுண்ணறிவு (ஏஐ), அணு ஆயுதப் போர், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட 17 முக்கிய அச்சுறுத்தல்கள், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் மனிதர்களின் ஆரோக்கியத்தையும் உயிர்வாழ்வையும் கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்று ‘தி லான்செட்’ இதழின் புதிய ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.
ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற உலக சுகாதார உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, உலக நாடுகள் உடனடியாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
35 நிபுணர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வு, 2025 முதல் 2100 வரையிலான காலகட்டத்தில் உலக மக்களின் ஆரோக்கியத்துக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை ஆய்வு செய்துள்ளது.
இதையும் படிங்க: AIயை கட்டுப்படுத்தாவிட்டால் 100 கோடி பேரை கொல்லும் ஆபத்தான ஆயுதமாக மாறிவிடும்..! பில் கேட்ஸ் எச்சரிக்கை!
செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடு, அணு ஆயுத மோதல், காற்று மாசுபாடு, பருவநிலை மாற்றம், நுண்ணுயிர் எதிர்ப்பு திறன், குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு, தொற்றுநோய்கள், உடல் பருமன், மனநலப் பிரச்சினைகள் மற்றும் வருமான ஏற்றத்தாழ்வு உள்ளிட்டவை முக்கிய அச்சுறுத்தல்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் என்ன நடக்கும்?
அணு ஆயுதப் போர் ஏற்பட்டால், பெருமளவில் உருவாகும் புகையும் தூசும் வளிமண்டலத்தைப் பாதித்து, சூரிய ஒளி பூமியை அடைவதைக் குறைக்கக்கூடும். இதனால் உலக வெப்பநிலை திடீரெனக் குறைந்து, பயிர் விளைச்சல் பாதிக்கப்படலாம். உணவு உற்பத்தி சரிவடைந்தால், பல நாடுகளில் கடுமையான உணவுப் பற்றாக்குறையும் பஞ்சமும் ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் தாக்கம் ஒரு நாட்டுடன் முடிந்துவிடாமல் உலகம் முழுவதும் பரவக்கூடும்.
ஏஐ தொழில்நுட்பமும் புதிய அச்சுறுத்தலும்
ஏஐ தொழில்நுட்பம் மருத்துவம், கல்வி உள்ளிட்ட துறைகளில் பல நன்மைகளை வழங்கினாலும், அது தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுவது கவலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, உயிரியல் ஆயுதங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஏஐ தவறாகப் பயன்படுத்தப்பட்டால், உலகப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவாலாக மாறக்கூடும் என்று அறிக்கை எச்சரிக்கிறது.
உலகத் தலைவர்களுக்கு அவசர அழைப்பு
ஆய்வுக் குழுவின் இணைத் தலைவர் கிறிஸ்டோபர் முர்ரே, தற்போதைய அபாயங்களைக் கட்டுப்படுத்தத் தவறினால் எதிர்காலத் தலைமுறைகள் கடுமையான உடல்நலப் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என்று வலியுறுத்தியுள்ளார். மக்களை அச்சுறுத்துவது இந்த அறிக்கையின் நோக்கம் அல்ல; மாறாக, ஆபத்துகள் பேரழிவாக மாறுவதற்கு முன்பே அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.
சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், மருத்துவம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்தல், உருவாகும் அபாயங்களைத் தொடர்ந்து கண்காணித்தல் ஆகியவற்றை உலக நாடுகள் முன்னெடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த அறிக்கை மனித இனம் 2100-க்குள் நிச்சயமாக அழிந்துவிடும் என்ற கணிப்பு அல்ல; ஆபத்துகளைப் புறக்கணித்தால் ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகள் குறித்த எச்சரிக்கையாகும்.
இதையும் படிங்க: ஏஐ.யை ஆயுதமாக்காதீங்க! தொழில்நுட்பத்தை ஆயுதமாக்கினால் முன்னேற்றம் பாதிக்கும்! பிரிக்ஸ் மேடையில் மோடி அதிரடி!