விடுபட்டவர்கள் கவனத்திற்கு! உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? இன்றே கடைசி வாய்ப்பு..
தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் இன்று (ஜனவரி 18) கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில், விடுபட்ட பெயர்களைச் சேர்க்கவும் திருத்தங்கள் செய்யவும் இன்று (ஜனவரி 18) கடைசி வாய்ப்பாகும். 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள சூழலில், உங்கள் ஜனநாயகக் கடமையை உறுதி செய்ய இன்றே சரிபார்ப்பது அவசியமாகும்.
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, துல்லியமான வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் நோக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த சில மாதங்களாகச் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2025 நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய இந்தப் பணிகளின் ஒரு பகுதியாக, இன்று (ஜனவரி 18) பெயர்களைச் சேர்க்கவும், நீக்கவும் அல்லது திருத்தங்கள் செய்யவும் வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நிறைவடைகிறது.
தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி, தமிழகம் முழுவதும் சுமார் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பல்வேறு காரணங்களுக்காகப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதில் 66 லட்சம் பேர் முகவரி மாற்றம் மற்றும் இடப்பெயர்வு காரணமாக நீக்கப்பட்டுள்ளனர். குறிப்பாகச் சென்னையில் மட்டும் 14.25 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 12 லட்சம் பேர் மட்டுமே மீண்டும் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ள நிலையில், தகுதியுள்ள பல வாக்காளர்கள் இன்னும் பட்டியலில் இணையாமல் இருக்கும் சூழல் நிலவுகிறது.
இதையும் படிங்க: ஜனவரி 18-ல் தமிழகம் முழுவதும் கலை சங்கமம்! வாகை சந்திரசேகர் அறிவிப்பு!!
எனவே, பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை உடனடியாகச் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்காகத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான voterportal.eci.gov.in அல்லது voters.eci.gov.in ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். மேலும், 'Voter Helpline' செயலி மூலமாகவும் உங்கள் விவரங்களை உள்ளிட்டுச் சரிபார்க்கலாம். ஒருவேளை உங்கள் பெயர் விடுபட்டிருந்தால், இன்று நள்ளிரவுக்குள் ஆன்லைன் மூலமாகப் படிவம் 6-ஐப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களும் இதைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலாதவர்கள், தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை (BLO) நேரில் சந்தித்துப் படிவங்களை வழங்கவும் இன்று கடைசி வாய்ப்பாகும். இந்தப் பணிகளைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனும் தங்களின் பெயர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்துகொள்வது அவர்களின் தலையாய கடமையாகும்.
இதையும் படிங்க: வான்புகழ் கொண்ட தமிழ்நாடு! எடப்பாடி பழனிசாமியின் திருவள்ளுவர் தின வாழ்த்து..!!