மலேசியாவில் அதிவேகமாக பரவும் தொற்று! 6,000 மாணவர்களுக்கு காய்ச்சல்! பள்ளிகள் மூடல்!
மலேசியாவில் மாணவர்கள் 6 ஆயிரம் பேர் இன்புளுயன்சா காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன.
மலேசியாவில் அண்மையில் இன்புளுயன்சா (இன்ஃப்ளூயன்சா) காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால், 6,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மழலையர் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக, பாதிப்பு அதிகம் ஏற்பட்ட பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
சுகாதாரத் துறையின் ஆலோசனையின்படி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்றுக்காலத்தில் பெற்ற அனுபவத்தைப் பயன்படுத்தி, அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
மலேசியாவின் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, கடந்த வாரம் (எபிடெமியாலஜி வாரம் 40/2025) 97 இன்புளுயன்சா கிளஸ்டர்கள் (தொற்று குழுக்கள்) பதிவாகியுள்ளன. இது முந்தைய வாரத்தின் 14 கிளஸ்டர்களைப் போல்யும் ஏழு மடங்கு அதிகம். இந்த கிளஸ்டர்களில் பெரும்பாலானவை பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளில் ஏற்பட்டவை.
செலங்கூர் மாநிலத்தில் மட்டும் 43 கிளஸ்டர்கள் உள்ளன. இன்புளுயன்சா A மற்றும் B வகைகள் பரவியுள்ளன, இவை குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ளன. அறிகுறிகள் லேசானவையாக இருந்தாலும், தொற்று வேகமாகப் பரவுவதால் அச்சம் நிலவுகிறது.
மலேசியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவிட் காலத்திற்குப் பின் இத்தகைய பரவல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சுகாதார அமைச்சர் டுல்கெப்லி அஹ்மத், "நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது" என ஆறுதல் கூறினாலும், கல்வி அமைச்சகத்துடன் இணைந்து மேலும் நடவடிக்கைகளைப் பரிசீலிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: HIGH ALERT - 'ஸ்ட்ரேடஸ்' மீண்டும் அச்சுறுத்தும் கோவிட்!! அமெரிக்காவில் வேகமாக பரவும் உருமாறிய கொரோனா!
பள்ளிக்கல்வி இயக்குநர் முகமது அஹ்மது அவர்கள் கூறுகையில், "கோவிட்-19 தொற்றுக்காலத்தில் இருந்து இன்புளுயன்சா போன்றவற்றை எதிர்கொண்டு சமாளிக்கும் திறன் நமக்கு உண்டு. தற்போது 6,000 பள்ளி மாணவர்கள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு அதிகம் ஏற்பட்ட பள்ளிகளை தற்காலிகமாக மூடியுள்ளோம். இது மாவட்ட சுகாதார அலுவலகங்களின் (PKD) ஆலோசனையின்படி நடைபெறுகிறது" என்றார்.
அவர் குறிப்பிட்டபடி, பாதிப்பு அளவு பொறுத்து பள்ளிகளின் மூடல் நடைபெறுகிறது. உதாரணமாக, ஜோஹர் பாருவின் மாசை பகுதியில் உள்ள சேகோலா கெபாங்சானன் பெர்மாஸ் ஜெயா 2 பள்ளியின் சிறப்பு கல்வி ஒருங்கிணைப்பு திட்டம் (PPKI) வகுப்பு, அக்டோபர் 8 முதல் 17 வரை 10 நாட்கள் மூடப்பட்டுள்ளது.
எவ்வளவு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக துல்லியமான தகவல் வெளியாகவில்லை என்றாலும், பெரும்பாலான பாதிப்புகள் மழலையர் பள்ளிகளில் ஏற்பட்டுள்ளன. இந்த மூடல், மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டது. மேலும், நவம்பர் 3ஆம் தேதி தொடங்கவுள்ள சிஜில் பெலாஜரன் மலேசியா (SPM) தேர்வுக்கு முன் இது சவாலாக உள்ளது. கல்வி அமைச்சகம், தேர்வு வாரியத்தை இதற்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குநர் முகமது அஹ்மது மேலும் கூறுகையில், "அனைத்து பள்ளிகளிலும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி, கைகளை சுத்தம் செய்வது போன்ற சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். குழுவாக கூடி நோய் பரவலை ஏற்படுத்தக்கூடாது. பெரிய குழு நிகழ்ச்சிகளை குறைக்கவும் அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.
சுகாதார அமைச்சகம், பள்ளிகளுக்கு வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. இன்புளுயன்சா A வகை, பறவைகள், பன்றிகள் உள்ளிட்டவற்றை பாதிக்கும் திறன் கொண்டது என்பதால், பரவல் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் இந்த பரவல், கோவிட் காலத்திற்குப் பின் பெரிய சவாலாக உள்ளது. பெற்றோர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். அரசு, தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது எனவும், தேவைக்கு ஏற்ப மேலும் நடவடிக்கைகள் எடுக்கும் எனவும் உறுதியளித்துள்ளது.
இதையும் படிங்க: BOMB வெச்சுருக்கோம்... EPS வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பதற்றம்...!