பிரம்மாண்ட பேரணி சென்ற இம்ரான் கான் ஆதரவாளர்கள்..!! தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை..!! அடுத்த கட்டம் என்ன..??
அரசு அதிகாரிகள் பேரணிக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என எச்சரித்துள்ளனர்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் நிறுவனருமான இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, கட்சி ஆதரவாளர்கள் பிரம்மாண்ட நீண்ட பேரணியைத் தொடங்கியுள்ளனர். கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் லக்கி மார்வாட் பகுதியில் உள்ள காண்டி சவுக்கில் இருந்து இஸ்லாமாபாத்தை நோக்கி சுமார் 275 கிலோமீட்டர் தூரம் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, இம்ரான் கானின் உடல்நிலை குறித்த கவலைகள் அதிகரித்ததை அடுத்து, இந்த பேரணியைத் தவிர்ப்பதற்காக பாகிஸ்தான் மத்திய அரசுக்கும் பிடிஐக்குமிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இருப்பினும், சிறையில் உள்ள இம்ரான் கானை நேரடியாகச் சந்தித்து ஆலோசனை பெற கட்சித் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும், அவருக்கு உடனடி மருத்துவப் பரிசோதனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டதால் பேச்சுவார்த்தை முற்றிலும் தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து, கைபர் பக்துன்க்வா முதலமைச்சர் சோஹைல் ஆஃப்ரிடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காண்டி சவுக்கிலிருந்து பேரணி தொடங்கியது. டேங்க், டேரா இஸ்மாயில் கான், தெற்கு மற்றும் வடக்கு வஜிரிஸ்தான், பன்னு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் சிவப்பு-பச்சை நிற கட்சிக் கொடிகளை ஏந்தியபடி இணைந்தனர்.
இதையும் படிங்க: உணவுப் பஞ்சத்தின் விளிம்பில் பாகிஸ்தான்? இந்தியா வைத்த 'செக்'கால் அதிகரிக்கும் நெருக்கடி!!
பேரணியைத் தடுக்க முயன்ற பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே சில இடங்களில் கல்வீச்சு மற்றும் தடியடி மோதல்கள் ஏற்பட்டன.தலைநகருக்குள் நுழைவதைத் தடுக்க இஸ்லாமாபாத் மற்றும் சுற்றுவட்டார முக்கிய சாலைகளில் பிரம்மாண்ட கப்பல் கன்டெய்னர்கள் அடுக்கி பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன. கூடுதல் பாதுகாப்புப் படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள் பேரணிக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என எச்சரித்துள்ளனர்.
73 வயதான இம்ரான் கான் 2023 ஆகஸ்ட் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை நிர்வாகத்தின் அலட்சியத்தால் அவரது வலது கண்ணின் பார்வை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினரும் கட்சியும் குற்றம்சாட்டுகின்றனர். அவருக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவை அனைத்தும் அரசியல் பழிவாங்கல் என ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
பேரணி தற்போது காரக் மாவட்டத்தை அடைந்துள்ளது. அடுத்த சில நாட்களில் கோஹட், பெஷாவர் வழியாக முன்னேறி அக்டோபர் 8-ம் தேதி கைராபாத் பகுதியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு அடுத்த கட்ட உத்தியை கட்சி அறிவிக்கும். இந்தப் போராட்டம் பாகிஸ்தானில் மீண்டும் அரசியல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு குறி..!! அதிரடி தாக்குதல் நடத்திய பாக்.,!! பதற்றம் உச்சம்!!