மதுரை மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கில் மீண்டும் அதிரடி... ஓய்வு பெற்ற சார் பதிவாளர் கைது...!
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு சேவை செய்வதற்கான 60 கோடி மதிப்பிலான அறக்கட்டளை சொத்து பத்திரப்பதிவு விவகாரம். ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மற்றும் அழகர்கோயிலுக்கு சேவை செய்வதற்காக கடந்த 1930ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக பட்டா மாற்றம் செய்யப்பட்டு, பத்திரப்பதிவு மற்றும் அடமானம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. சுமார் 1.79 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த நிலம் மதுரை சொக்கிகுளம் பகுதியில் உள்ள அசோதா விலாஸ் பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை அளித்த புகாரின் அடிப்படையில், மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் வி.ஏ.ஓ., முன்னாள் வட்டாட்சியர், சார்பதிவாளர்கள் உள்ளிட்ட 19 பேர் மீது மோசடி மற்றும் கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் முதற்கட்டமாக புதுக்கோட்டை கறம்பக்குடியைச் சேர்ந்த ராஜ்குமார், உசிலம்பட்டியைச் சேர்ந்த இளையராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து ராமநாதபுரம் ஆட்சியரின் நேர்முக உதவியாளராக இருந்த துணை ஆட்சியர் அன்பழகனும் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: 7 பேரை உயிருடன் எரித்துக்கொன்ற பெண்.. தமிழகத்தை உலுக்கிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!
அதன்பின்னர், பத்திரப்பதிவுக்கு உதவியதாகக் கூறப்படும் திண்டுக்கல் சிறுமலை பகுதியைச் சேர்ந்த காளிகுமார் கைது செய்யப்பட்டார். இதையடுத்து முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் அரசனும் கைது செய்யப்பட்டார். இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட துணை ஆட்சியர் அன்பழகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய ஜாமீன் மனுவும் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வழக்கில் தொடர்புடைய மேலும் 10 பேர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த ராஜ்குமார், உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜா, சப் கலெக்டர் அன்பழகன், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் அரசன் ஆகிய 4 பேரை மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 15 ஆவது நபரான தூத்துக்குடி மாவட்டம் முறப்பாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற சார்பதிவாளரான திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியை சேர்ந்த அனந்தராமனை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: போலீஸ் தாக்கியதில் மரணம்?! “என் சாவுக்கு அந்த 5 பேர்தான் காரணம்”! இறப்புக்கு முன் வீடியோ வெளியிட்ட சிவனடியார்!