மக்கள் பிரச்சனைகளுக்கு எப்போ கால்ஷீட்..? போராடனுமா.? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!
முதல்வர் விஜய் மக்கள் பிரச்சனைகளுக்கு எப்போது கால்ஷீட் கொடுப்பார் என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று சுமார் ஒரு மாத காலமே ஆகியுள்ள நிலையில், மக்கள் பிரச்சினைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளால் தீவிரமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
தவெக அரசு பதவியேற்ற பிறகு, கோயம்புத்தூர் சுலூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவங்கள், பல்வேறு கொலை வழக்குகள், இரட்டைக் கொலைகள் போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. கடந்த 15 நாட்களில் மட்டும் 25 கொலைகள், நான்கு இரட்டைக் கொலைகள் மற்றும் 19 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்ததாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். "Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"... "சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"... என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? என்று கேள்வி எழுப்பினார். மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: "ஸ்டாலின் அப்படி சொல்லல"..! திரித்து வெளியிடுறீங்க... தங்கம் தென்னரசு பகிரங்க குற்றச்சாட்டு..!!
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேட்டுள்ள ஸ்டாலின், சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? என கேள்வி எழுப்பினார். மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? எனவும் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: இனி யாரு கூட்டணியும் வேணாம்! தனித்தே போட்டி! உள்ளாட்சி தேர்தலில் பலத்தை காட்ட திமுக முடிவு?!