வேட்டி சட்டையில் அசத்தும் முதல்வர்... பொருநை அருங்காட்சியகம் குறித்து சிறப்பு வீடியோ வெளியீடு..!
நெல்லையில் திறக்கப்படவுள்ள பொருளை அருங்காட்சியகம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினின் சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
பொருநை அருங்காட்சியகம் தமிழகத்தின் தொன்மையான நாகரிகத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் ஒரு முக்கியமான அடையாளமாக உருவெடுத்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் பண்டைய பெயரான பொருநை எனும் பெயரில் அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், திருநெல்வேலி மாவட்டத்தில் ரெட்டியார்பட்டி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த வளாகம், தமிழர்களின் ஆதி நாகரிகத்தின் தொட்டிலாகக் கருதப்படும் பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தைப் பிரதிபலிக்கிறது. இங்கு காட்சிப்படுத்தப்படும் தொல்பொருள்கள் தமிழர்களின் செழுமையான வாழ்க்கை முறையை விவரிக்கின்றன.
வெண்கலப் பாத்திரங்கள், இரும்பு ஆயுதங்கள், சிகப்பு-கருப்பு பானைகள், அரிய மணிகள், தந்தத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள், செம்பு - இரும்பு மோதிரங்கள், வளையல்கள், அரவைக் கற்கள் போன்றவை அன்றைய தொழில்நுட்பம், வாணிபம், கலை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகின்றன. பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
நெல்லையில் திறக்கப்பட உள்ள பொருநை அருங்காட்சியகம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் முதல்வர் பேசும் சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பொருநை ஆற்றங்கரையில் வரலாற்றுத் தடயங்கள் உள்ளதாக முதலமைச்சரின் சிறப்பு வீடியோவில் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: செவிலியர்கள் சாபம் திமுகவை அரியணை ஏற விடாது... ஆணவம் தலைக்கேறிடுச்சு.. நயினார் கண்டனம்...!
பொருநை ஆற்றங்கரையில் தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பொருநை அருங்காட்சியகம் தமிழர்களின் 3,200 ஆண்டுகால பழமையான நாகரீகத்தை பறைசாற்றும் வகையில் அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். பொருநை அருங்காட்சியகத்தையும், கீழடி அருங்காட்சியகத்தையும் மக்கள் நிச்சயம் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து எழுதப்பட வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: நெல்லையில் முதல்வர்... மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு... செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்...!