தொடர் தொழில்நுட்ப கோளாறு.. மோனோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்..!!
தொடர் தொழில்நுட்ப காரணமாக, மும்பையில் மோனோ ரயில் சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மும்பை மெட்ரோபாலிட்டன் ரீஜியன் டெவலப்மென்ட் அத்தாரிட்டி (எம்எம்ஆர்டிஏ) இன்று (செப்டம்பர் 20) முதல் மோனோ ரெயில் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. செம்பூர் முதல் சந்த் கட்சே மஹாராஜ் சௌக் (சாட் ரஸ்தா) வரை உள்ள 19.74 கி.மீ. தொலைவு கொண்ட இந்த சேவை, இரு திசைகளிலும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த முடிவு, சமீப காலங்களில் ஏற்பட்ட தொடர் தொழில்நுட்ப கோளாறுகளுக்குப் பின், அடிப்படை அப்டிகிரேட் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. சேவை மீண்டும் தொடங்கும் தேதி அறிவிக்கப்படவில்லை, ஆனால் அதிகாரிகள் இரண்டு மாதங்களுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: இது 2வது முறை.. அந்தரத்தில் தவித்த பயணிகள்.. ஜர்க்காகி நின்ற மோனோ ரயில்..!!
இந்தியாவின் ஒரே மோனோ ரெயில் அமைப்பாக 2014-இல் தொடங்கப்பட்ட இது, ரூ.2,700 கோடி செலவில் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த ரெயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதாகி நடுவழியில் நிற்பது தொடர் கதையாகி வருகிறது. கடந்த மாதம் மட்டும் ஏழு முறை சேவை தடைபட்டது.
கடந்த செப்டம்பர் 15ம் தேதி, அந்தோப் ஹில் அருகே ஒரு ரெயில் திடீரென நின்றது; 17 பயணிகள் உள்ளே சிக்கிக்கொண்டனர். அதற்கு முன்னர், ஆகஸ்ட் 19ம் தேதி அன்று 582 பயணிகள் மழையில் 4 மணி நேரம் தவித்தனர். இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துள்ளன.
MMRDA, இந்த சிக்கல்களை ஆழமாக விசாரிக்க ஒரு சிறப்பு கமிட்டியை அமைத்துள்ளது. இந்த நிறுத்த காலத்தில், புதிய ரெயில்கள் இணைப்பு, கம்யூனிகேஷன் பேஸ்ட் ட்ரெயின் கண்ட்ரோல் (சிபிடிசி) சிக்னலிங் அமைப்பு நிறுவல், பழைய ரெயில்களின் முழு புதுப்பிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும். இரவு நேரத்தில் மட்டும் பணிகள் செய்ய முடியாததால், இந்த நிறுத்தம் தேவைப்படுகிறது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
MMRDA கமிஷனர் டாக்டர் சஞ்ஜய் முகர்ஜி, "இது மோனோ ரெயிலை மீட்டெடுக்கும் ஒரு சிந்தனையான அடி. புதிய தொழில்நுட்பங்கள் மூலம் இது பாதுகாப்பான, நம்பகமானதாக மாறும்" எனக் கூறினார். மோனோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டதால் மாற்று போக்குவரத்தைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த அப்டிகிரேட், கிழக்கு காரிடார் போக்குவரத்தை மேம்படுத்தி, தினசரி 1.5 லட்சம் பயணிகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அடடே.. இப்போ மும்பையிலுமா..!! அமேசானின் அசத்தல் மூவ்..!!