ரோமில் பிரதமர் மோடி.. மெலோனியுடன் ஸ்வீட்டான ஒரு சந்திப்பு..!! ஒரே காரில் பயணம்..!!
'கூட்டு உத்திசார் செயல் திட்டம் 2025-2029'-ஐ இரு தரப்பினரும் தீவிரமாக முன்னெடுத்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை உள்ளடக்கிய ஐந்து நாட்டுச் சுற்றுப்பயணத்தின் இறுதிக் கட்டமாக இத்தாலியில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வருகை தந்தார். நார்வே, ஸ்வீடன், நெதர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட பின்னர் ரோம் வந்தடைந்த அவர், இத்தாலியத் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முக்கியப் பேச்சுகளில் ஈடுபட உள்ளார்.
விமான நிலையத்தில் இத்தாலிய துணைப் பிரதமர் அன்டோனியோ தஜானி பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றார். தொடர்ந்து, இத்தாலியில் வாழும் இந்தியப் புலம்பெயர் இந்தியர்களுடன் பிரதமர் மோடி சிறப்பு சந்திப்பு நடத்தினார். அவர்களின் பங்களிப்பு மற்றும் இந்தியாவின் வளர்ச்சியில் அவர்கள் வகிக்கும் பங்கைப் பாராட்டினார்.
இதனைத் தொடர்ந்து, இத்தாலிய குடியரசுத் தலைவர் செர்ஜியோ மட்டரெல்லா மற்றும் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோர் பிரதமர் மோடியை சிறப்பாக வரவேற்றனர். இரு நாட்டுத் தலைவர்களும் ஒரே காரில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது. இது இரு தரப்புக்கும் இடையிலான நெருக்கமான உறவை பிரதிபலிக்கிறது.
இதையும் படிங்க: இன்று முதல் CM சீட்டில்.. வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி..!! நன்றி கூறிய தமிழக முதலமைச்சர் விஜய்..!!
பிரதமர் மெலோனி, கொலோசியம் அரங்கில் எடுத்த புகைப்படத்தை தனது 'X' பக்கத்தில் பகிர்ந்து, “ரோமிற்கு நல்வரவு, எனது நண்பரே!” என்று உணர்ச்சி பொங்க நெகிழ்ச்சியுடன் பதிவிட்டார். பிரதமர் மோடியும் தனது 'X' தளத்தில் மெலோனியுடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்து, “ரோமில் தரையிறங்கியதும் பிரதமர் மெலோனியை இரவு உணவின்போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க கொலோசியம் தளத்திற்கு சென்றோம். பல்வேறு முக்கிய தலைப்புகளில் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டோம். இந்தியா-இத்தாலி உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இன்றைய பேச்சுவார்த்தைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.
இந்தச் சுற்றுப்பயணத்தின் ஒரு முக்கிய அம்சமாக, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பான FAO-வின் தலைமையகத்திற்கு பிரதமர் மோடி சென்று, உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பில் இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். இரு நாடுகளும் ‘கூட்டு உத்திசார் செயல் திட்டம் 2025-2029’ஐ தீவிரமாக செயல்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசித்தனர்.
வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, புதிய ஆற்றல் மற்றும் கலாச்சாரத் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தத் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-இத்தாலி உறவுகள் சமீபகாலமாக வேகமாக வளர்ந்து வருகின்றன. இரு நாடுகளும் G20 உறுப்பினர்கள் என்பதால், உலகளாவிய பிரச்சினைகளான பயங்கரவாத எதிர்ப்பு, காலநிலை மாற்றம் மற்றும் விநியோகச் சங்கிலி பாதுகாப்பு போன்றவற்றில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. பிரதமர் மோடியின் இத்தாலி வருகை, இருதரப்பு உறவுகளை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் என கருதப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!