விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்ட பிரதமர் மோடி..!! 'அக்ரிகோலா' பதக்கம் வழங்கி கௌரவித்த ஐநா..!!
விவசாய மேம்பாடு மற்றும் விவசாயிகளின் நலனுக்காக ஆற்றிய சிறந்த பங்களிப்புக்கு வழங்கப்படும் ஐநாவின் உயரிய கௌரவமான 'அக்ரிகோலா' பதக்கத்தை வென்றார் பிரதமர் மோடி.
விவசாய மேம்பாடு, உணவு பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் நலன் ஆகியவற்றில் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) சார்பில் 'அக்ரிகோலா' பதக்கம் வழங்கப்பட்டது. இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள FAO தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில் FAO பொதுச் செயலாளர் டாக்டர் க்யூ டாங்க்யு இந்த உயரிய கௌரவத்தை பிரதமருக்கு அளித்தார். இது FAO அமைப்பின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பிரதமர் மோடி தனது ஐந்து நாட்டு சுற்றுப்பயணத்தின் இறுதி கட்டமாக இத்தாலிக்கு வந்திருந்த நிலையில், இந்த விருது வழங்கப்பட்டது. FAO பிளெனரி ஹால் எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் பேசுகையில், “இந்த கௌரவம் எனக்கு மட்டுமல்ல, இந்தியாவின் அன்னதாதாக்களான விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், மீனவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழிலாளர்களுக்குரியது” என்று தெரிவித்தார். இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பை இந்த விருது பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவில் பிரதமர் மோடியின் தலைமையில் செயல்படுத்தப்பட்ட பல முக்கிய திட்டங்கள் FAOவால் பாராட்டப்பட்டுள்ளன. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி, பயிர் காப்பீட்டுத் திட்டம், மண்ண் சுகாதார அட்டை, நானோ உரங்கள், இயற்கை விவசாயம், டிஜிட்டல் விவசாயம் உள்ளிட்ட திட்டங்கள் விவசாய உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த உதவியுள்ளன.
இதையும் படிங்க: பிரதமர் மோடி தலைமையில் மீட்டிங்..!! மத்திய கிழக்கு பதற்றம், அமைச்சரவை மாற்றம் குறித்து முக்கிய விவாதப் பொருள்..!!
80 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் திட்டம் உலக அளவில் பாராட்டப்பட்டது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 3,000க்கும் மேற்பட்ட புதிய பயிர் வகைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், AI, ட்ரோன் தொழில்நுட்பங்கள் விவசாயத்தில் பயன்படுத்தப்படுவதாகவும் FAO தலைவர் சுட்டிக்காட்டினார்.
இந்திய பிரதமர்களில் மன்மோகன் சிங்குக்குப் பிறகு இரண்டாவது முறையாக மோடி இந்த பதக்கத்தைப் பெற்றுள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு FAOவுக்கு இந்திய பிரதமர் வருகை தந்த சிறப்பும் இதில் இணைந்துள்ளது. G20 மாநாட்டின் போது இந்தியா பகிர்ந்த டிஜிட்டல் விவசாய தீர்வுகள் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளன என FAO பாராட்டியது. இந்த விருது இந்திய விவசாயத்துறையின் முன்னேற்றத்தை உலக அரங்கில் அங்கீகரித்துள்ளது.
விவசாயிகளின் நலன், நிலையான விவசாயம், உணவு பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தியாவின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது. பிரதமர் மோடியின் தொலைநோக்கு சிந்தனை மற்றும் செயல்பாட்டுத் திட்டங்கள் இந்தியாவை உலக உணவு களஞ்சியமாக மாற்றும் பாதையில் கொண்டு சென்றுள்ளன. இந்த சாதனைக்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய விவசாயத்தின் பொன் காலம் என இதை வர்ணிக்கின்றனர்.
இதையும் படிங்க: 4 நாள் அரசுமுறை பயணம்! இந்தியா வந்திறங்கினார் சைப்ரஸ் அதிபர் நிகோஸ்!