தர்பூசணியில் கலந்திருந்த எலிமருந்து!! ஒரே குடும்பத்தில் 4 பேர் மரணத்தில் விலகியது மர்மம்!
மஹாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலியான சம்பவத்தில், அவர்கள் சாப்பிட்ட தர்பூசணியில் எலி மருந்து கலந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மும்பை: மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள ஜே.ஜே. நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், வீட்டில் சாப்பிட்ட தர்பூசணியில் கலந்திருந்த எலி மருந்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவர்கள் அப்துல்லா (40), அவரது மனைவி நஸ்ரின் (35), மகள்கள் ஜைனாப் (13) மற்றும் ஆயிஷா (16) ஆகியோர். கடந்த 26-ம் தேதி இரவு குடும்பத்தினர் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட பின்னர், வீட்டில் இருந்த தர்பூசணியை அனைவரும் சாப்பிட்டுள்ளனர்.
சில நிமிடங்களில் அனைவருக்கும் வாந்தி, உடல் உபாதை ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, சிறுமி ஆயிஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மற்ற மூவரும் தீவிர சிகிச்சைக்குப் பின்னும் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: நாசிக் ஐ.டி. நிறுவனத்தில் அரங்கேறிய சதி!! பெயரை மாற்றி மலேசியா அனுப்ப திட்டம்! அம்பலமானது மதமாற்ற கொடூரம்!!
போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, இறந்தவர்களின் உடல் திசுக்கள் மற்றும் மீதமிருந்த தர்பூசணி மாதிரிகளை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பினர். ஆய்வு முடிவில் தர்பூசணியில் ‘ஜிங்க் பாஸ்பைடு’ எனப்படும் வீரியமிக்க எலி மருந்து கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த மருந்து எப்படி தர்பூசணியில் கலந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேண்டுமென்றே கலக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மருத்துவர்கள் தெரிவித்தபடி, ஜிங்க் பாஸ்பைடு நேரடியாக நஞ்சாக இல்லாவிட்டாலும், வயிற்றில் உள்ள அமிலத்துடன் கலந்ததும் மிக ஆபத்தான நச்சு வாயுவை உருவாக்குகிறது. இந்த வாயு ரத்தத்தில் கலந்து இதயம், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் செல்களை சிதைத்து, அவற்றின் செயல்பாட்டை முற்றிலும் நிறுத்திவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் மும்பை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்பூசணி உள்ளிட்ட பழங்களை வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் சதி இருக்கிறதா என்பது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறி போலி சாமியார் கைவரிசை!! உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவி!