என்னது ரத்தின கம்பளமா? பாஜக கூட்டணி ரத்த கம்பளம்.. இபிஎஸ்க்கு முத்தரசன் பதிலடி..!
பாஜக உடனான கூட்டணி என்பது ரத்தினகம்பளம் அல்ல ரத்தக்கம்பளம் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு முத்தரசன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகள் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - CPI மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - CPM) ஒரு காலத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு கொண்டிருந்தன. தொழிலாளர் உரிமைகள், விவசாயிகளின் நலன், மற்றும் சமூக நீதி குறித்த அவர்களின் போராட்டங்கள் மக்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றிருந்தன. இருப்பினும், கடந்த சில தசாப்தங்களில், தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் ஆதிக்கம் அதிகரித்ததால், கம்யூனிஸ்ட் கட்சிகளின் செல்வாக்கு குறைந்துவிட்டதாக பலர் கருதுகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, அரசியல் களத்தில் தனது கருத்துகளை வெளிப்படையாகப் பதிவு செய்யும் தலைவராக அறியப்படுபவர். கோயம்புத்தூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், அவர் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து விமர்சனம் செய்து பேசியது பரவலான கவனத்தை ஈர்த்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது என்று விமர்சித்தார்.
இந்தக் கருத்து, தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செல்வாக்கு குறைந்துவிட்டதாகவும், அவை மக்கள் மத்தியில் தங்கள் முக்கியத்துவத்தை இழந்துவிட்டதாகவும் அவர் கருதுவதை வெளிப்படுத்துகிறது. இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு (சிபிஎம், சிபிஐ) 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தனது கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பேசிய அவர், திமுக கூட்டணியில் இந்தக் கட்சிகள் அவமதிக்கப்படுவதாகவும், அதிமுகவில் இணைந்தால் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: இவரே குண்டு வெப்பாராம்.. இவரே அதை எடுப்பாராம்! நடிக்காதீங்க ஸ்டாலின்.. விளாசிய இபிஎஸ்..!
எடப்பாடி பழனிச்சாமியின் கூட்டணி அழைப்புக்கு முத்தரசன் பதிலடி கொடுத்துள்ளார். இடதுசாரிகளை இபிஎஸ் கூட்டணிக்கு அழைப்பது நல்ல நகைச்சுவை என்றும் பாஜகவுடன் கூட்டணி என்பது ரத்தின கம்பளம் இல்லை ரத்தம் வடிந்த கம்பளம் என்று தெரிவித்தார். அதிமுக தேசிய கல்விக் கொள்கையை ஆதரிக்கிறதா எதிர்கிறதா என்ற கேள்வி எழுப்பிய அவர், தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்று கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: அம்புட்டு பாசமா? கம்யூனிஸ்டுகளுக்கு இபிஎஸ் விரிப்பது வஞ்சக வலை.. சண்முகம் காட்டம்..!