×
 

உள்நாட்டுப் போருக்கு மத்தியில் வாக்குப்பதிவு! மியான்மரில் துவங்கியது பொதுத்தேர்தல்!! ஜனவரியில் வெளியாகுது ரிசல்ட்!!

கடந்த 2021ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு மியான்மரில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் பொதுத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

யாங்கூன்: மியான்மாரில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்து வரும் சூழலில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 2021ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு நாடு பெரும் அரசியல் நெருக்கடியில் உள்ளது. இந்தத் தேர்தல் 2026 ஜனவரி மாதத்துக்குள் முடிவுகளை வெளியிடும் வகையில் நடத்தப்படுகிறது என்று ராணுவ அரசு தெரிவித்துள்ளது.

மியான்மாரில் கடந்த 2021 பிப்ரவரியில் ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. அப்போது ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்எல்டி) அரசு ஆட்சியில் இருந்தது. ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

பல இனக்குழுக்களின் ஆயுதக் குழுக்களும் ராணுவத்துக்கு எதிராக போரைத் தொடங்கின. இதனால் நாடு உள்நாட்டுப் போரின் பிடியில் சிக்கியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: அன்புமணியை தொடர்ந்து விமர்சிக்கும் ஜி.கே.மணி!! திமுகவில் இணைந்து எம்.எல்.ஏ பதவி பெற திட்டம்!

இந்தச் சூழலில் ராணுவ அரசு தேர்தல் நடத்துவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடக்காது என்று எதிர்க்கட்சிகளும் சர்வதேச அமைப்புகளும் குற்றம்சாட்டுகின்றன.

ஆங் சான் சூகி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். என்எல்டி கட்சி கலைக்கப்பட்டுள்ளது. பல போராட்டக்காரர்கள் மற்றும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ராணுவ அரசு தேர்தலை நடத்தி முடிக்க உறுதியாக உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு சில பகுதிகளில் தொடங்கியுள்ளது. முழு தேர்தல் 2026 ஜனவரிக்குள் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை மேற்பார்வையிட இந்தியா, சீனா, ரஷ்யா, கம்போடியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகள் பிரதிநிதிகளை அனுப்பியுள்ளன. இந்த நாடுகள் ராணுவ அரசுக்கு ஆதரவாக உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல நாடுகள் இந்தத் தேர்தலை ஏற்க மறுத்துள்ளன. உள்நாட்டுப் போர் நடக்கும் சூழலில் தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று அவை கூறுகின்றன. மியான்மார் மக்களின் எதிர்காலம் இந்தத் தேர்தலால் தீர்மானிக்கப்படும் என்பதால் உலகம் முழுவதும் கவனம் செலுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பாஜக கூட கூட்டணி வச்சு எம்.எல்.ஏ ஆனது யாரு? நானா? திருமாவளவனா? சீமான் கிடுக்குப்பிடி கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share