×
 

50 வருஷம் ஆச்சு!! மீண்டும் நிலவுக்கு பயணம்! கவுண்டவுனை துவக்கியது நாசா!!

அமெரிக்காவில் இருந்து, 50 ஆண்டுகளுக்கு பின் மனிதர்களை நிலவுக்கு சுமந்து செல்லும், 'ஆர்டெமிஸ் - 2' விண்கலத்தின், 'கவுன்ட் டவுன்' ஒத்திகையை நாசா துவக்கியது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, 1972-க்குப் பிறகு முதல் முறையாக நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் முக்கிய பகுதியான ஆர்டெமிஸ்-2 (Artemis II) பயணத்திற்கான இறுதிக் கட்ட சோதனை தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு இரண்டு நாள் கவுன்ட் டவுன் ஒத்திகை (Countdown Rehearsal) துவங்கியது.

இந்த ஒத்திகையில் ராக்கெட் SLS (Space Launch System) மற்றும் விண்கலம் Orion-ஐ எரிபொருள் நிரப்புவது, அனைத்து அமைப்புகளை சோதிப்பது, கட்டுப்பாட்டு அறை செயல்பாடுகள், அவசர நிலைமைகளுக்கு தயாராவது உள்ளிட்ட அனைத்து பணிகளும் முழுமையாக ஒத்திகை பார்க்கப்படுகின்றன. ராக்கெட்டின் இன்ஜின்களை மட்டும் இயக்காமல், மற்ற அனைத்து தொழில்நுட்ப கருவிகளும் சரியாக செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.

இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தால், வரும் பிப்ரவரி 8-ம் தேதி நான்கு விண்வெளி வீரர்களுடன் ஆர்டெமிஸ்-2 ராக்கெட் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 27 வருட சேவை.. நாசாவிலிருந்து ஓய்வு..!! அதிர்ச்சி கொடுத்த சுனிதா வில்லியம்ஸ்..!!

பயணத்தில் கலந்து கொள்ளும் வீரர்கள்:

  • கமாண்டர்: ரீட் வைஸ்மேன் (Reid Wiseman)
  • பைலட்: விக்டர் க்ளோவர் (Victor Glover)
  • மிஷன் ஸ்பெஷலிஸ்ட் 1: கிறிஸ்டினா கோக் (Christina Koch)
  • மிஷன் ஸ்பெஷலிஸ்ட் 2: ஜெர்மி ஹான்சன் (Jeremy Hansen – கனடா விண்வெளி வீரர்)

இவர்கள் தற்போது கிருமி தொற்று ஏற்படாமல் இருக்க தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த பயணம் நிலவை சுற்றி வரும் சுற்றுப்பயணமாகும். வீரர்கள் நிலவு மேற்பரப்பில் இறங்க மாட்டார்கள். ஆனால் அப்பல்லோ திட்டத்துக்குப் பிறகு முதல் முறையாக மனிதர்கள் நிலவுக்கு அருகில் செல்வார்கள்.

அப்பல்லோ திட்டத்தின் கீழ் 1968 முதல் 1972 வரை 24 விண்வெளி வீரர்கள் நிலவுக்கு அனுப்பப்பட்டனர். அதில் 12 பேர் நிலவு மேற்பரப்பில் கால் பதித்தனர். அதன் பிறகு 50 ஆண்டுகளாக மனிதர்கள் நிலவுக்கு செல்லவில்லை. ஆர்டெமிஸ் திட்டம் மூலம் நாசா 2020களின் இறுதியில் மீண்டும் நிலவில் மனிதர்களை தரையிறக்க திட்டமிட்டுள்ளது. ஆர்டெமிஸ்-2 இதற்கான முதல் மனித பயண சோதனையாகும்.

இந்த ஒத்திகை முடிவுகளைப் பொறுத்தே ஏவுதல் தேதி உறுதியாகும். நாசா தொழில்நுட்ப ரீதியாக எல்லாம் சரியாக இருப்பதை உறுதி செய்ய இந்த சோதனை மிக முக்கியமானது. வெற்றி பெற்றால், மனிதகுல வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கும்.

இதையும் படிங்க: மருத்துவ அவசரம்..!! பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்..!! நாசா அதிரடி உத்தரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share