×
 

ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் எந்த திட்டமும் இல்லை!! அமெரிக்கா - ஈரான் போரில் நேட்டோ அறிவிப்பு!

ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றுவது தொடர்பாக எந்தத் திட்டமும் இல்லை என்று நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் எந்தத் திட்டமும் நேட்டோ அமைப்புக்கு இல்லை என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணையை மூடியது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, உலக அளவில் எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்தது. இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றி எண்ணெய் விநியோகத்தை சீரமைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டார். இதற்காக ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் நாடுகள் தங்கள் ராணுவத்தை அனுப்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

டிரம்பின் இந்தக் கோரிக்கையை ஏற்று நேட்டோ படைகளை அனுப்ப சில உறுப்பு நாடுகள் ஆலோசனை வழங்கிய நிலையில், நேட்டோ அமைப்பு இதுவரை எந்தத் திட்டத்தையும் உருவாக்கவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ட்ரோன் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட இந்திய கப்பல்! மத்திய அமைச்சகம் கடும் கண்டனம்!

நேட்டோவின் ஐரோப்பியப் படைகளுக்கான உயர்மட்டத் தளபதி ஜெனரல் அலெக்ஸஸ் கிரின்கேவிச் இது தொடர்பாக கூறுகையில், “ஹார்முஸ் நீரிணையில் நேட்டோ செயல்படுவது முற்றிலும் அரசியல் சார்ந்த முடிவு. முதலில் அரசியல் ரீதியான வழிகாட்டுதல் வரவேண்டும். அதன் பின்னரே திட்டமிடல் நடைபெறும். தற்போது அரசியல் முடிவு எடுக்கப்படாததால் எந்தத் திட்டமும் வகுக்கப்படவில்லை” என்றார்.

32 உறுப்பு நாடுகளைக் கொண்ட நேட்டோ அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், துருக்கி, கனடா உள்ளிட்ட முக்கிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. 

ஹார்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையாகும். உலகின் 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகிறது. ஈரான் இதை மூடியதால் ஏற்பட்டுள்ள எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு உலகப் பொருளாதாரத்தை பாதித்து வருகிறது.

நேட்டோவின் இந்த அறிவிப்பு, டிரம்ப் நிர்வாகத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், போர் தொடரும் நிலையில் ஹார்முஸ் நீரிணை விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் அமைதி பேச்சுகளுக்கு வாய்ப்பு கோரி வருகின்றன. 

இதையும் படிங்க: மேற்காசிய போரை நிறுத்த 14 அம்ச ஒப்பந்தம்!! அமெரிக்கா - ஈரான் விரைவில் கையெழுத்திட வாய்ப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share