×
 

நேபாளத்தில் தொடங்கிய வெள்ளம்… 200 கி.மீ. தூரம் அடித்துச் செல்லப்பட்ட சடலங்கள்! இந்தியாவில் 7 உடல்கள் மீட்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் அடித்துவரப்பட்ட சடலங்களாக இவை இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் ஏற்படுத்திய பேரழிவின் தாக்கம் இந்தியாவிலும் தெரியத் தொடங்கியுள்ளது. நேபாளத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கருதப்படும் 7 பேரின் சடலங்கள், சுமார் 200 கி.மீ. தொலைவில் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆறுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் இரு நாடுகளிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவால் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக அங்கு சென்றிருந்த வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் மக்கள் பலரும் வெள்ளத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், நேபாளத்தின் ரசுவாகதி பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்கள் ஆங்காங்கே மீட்கப்பட்டு வருகின்றன. இதில் குறைந்தது 7 சடலங்கள் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நேபாள வெள்ளம்: 320 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை! வெளியுறவுத்துறை சொன்ன முக்கிய தகவல்!

மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் நீரோட்டத்தில் சுமார் 200 கி.மீ. தூரம் பயணித்து இந்திய எல்லைக்குள் வந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து மகாராஜ்கஞ்ச் மாவட்ட கலெக்டர் கூறுகையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் அடித்துவரப்பட்ட சடலங்களாக இவை இருக்கலாம் என தெரிவித்துள்ளார். எனினும், உயிரிழந்தவர்களின் அடையாளம் உள்ளிட்ட விவரங்களை உறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நேபாளத்தில் பாயும் நாராயணி ஆறு இந்திய எல்லைக்குள் நுழைந்ததும் கண்டக் நதியாக மாறுகிறது. வெள்ளநீர் தெற்கு திசையில் வேகமாகப் பாய்ந்தபோது, திரிசூலி ஆறு உள்ளிட்ட நீர்வழித்தடங்கள் வழியாக நாராயணி ஆற்றை அடைந்து, பின்னர் இந்தியாவுக்குள் நுழைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவின் தாக்கம் இந்திய எல்லைப் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. ஆற்றுப்பகுதிகளில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், அவை நேபாளத்தில் காணாமல் போனவர்களுடையதா என்பதை கண்டறிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

நேபாளத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வெள்ளத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறித்தும் அதிகாரப்பூர்வமாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தியாவிலும் ஆற்றுப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், மேலும் சடலங்கள் கண்டெடுக்கப்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நேபாள அரசின் திடீர் U டர்ன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மீட்புக் குழுக்களுக்கு பச்சைக்கொடி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share