நேபாள வெள்ளத்தில் மிதந்து வந்த வங்கி லாக்கர்! பணத்தை பங்கு போட்ட மக்கள்! காத்திருந்த அதிர்ச்சி!
பெட்டகம் திறக்கப்பட்டதும் அதற்குள் இருந்த பணத்தை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அந்தப் பணத்தை தங்களுக்குள் பிரித்துக் கொண்டு அங்கிருந்து சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
காத்மாண்டு: நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வங்கியின் பணப் பெட்டகம் ஒன்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதை மீட்ட சிலர் உடைத்து பணத்தை எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டேகோஷி பகுதியில் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் வங்கிக்குச் சொந்தமான வலுவான இரும்புப் பணப் பெட்டகம் ஒன்று வெள்ளத்தில் சிக்கி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. திரிசூலி ஆற்றில் மிதந்து சென்ற அந்தப் பெட்டகம் பல கிலோமீட்டர் தூரம் பயணித்து, தாதிங் மாவட்டத்தில் உள்ள கலச்சி கிராம ஊராட்சிக்குட்பட்ட பெல்குகோலா பகுதியில் கரை ஒதுங்கியது.
அப்போது வெள்ள நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆற்றின் கரையோரத்தில் கிடந்த இரும்புப் பெட்டகத்தை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பார்த்துள்ளனர். அதில் பணம் இருக்கலாம் என சந்தேகித்த அவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் கருவிகளைக் கொண்டு பெட்டகத்தை உடைத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நேபாள வெள்ளத்தில் மாயமான உறவினர்களை கண்டுபிடிக்க புது வழி! போலீசாரின் QR Code ஏற்பாடு!
பெட்டகம் திறக்கப்பட்டதும் அதற்குள் இருந்த பணத்தை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அந்தப் பணத்தை தங்களுக்குள் பிரித்துக் கொண்டு அங்கிருந்து சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தாதிங் மாவட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கினர். பணத்தை எடுத்துச் சென்றவர்களை அடையாளம் காணும் வகையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் 19 முதல் 49 வயதுக்கு உட்பட்ட 29 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மொத்தம் 92,68,505 நேபாள ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.58 லட்சம் என கூறப்படுகிறது. கைதானவர்கள் கலச்சி, சித்தாலேக் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேபாளத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்த தங்க நகைகளை திருடியதாக இருவர் கைது செய்யப்பட்ட சம்பவமும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் பேரிடர் சூழலை பயன்படுத்தி பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடைபெறுவது நேபாளத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வங்கி பெட்டகத்தில் இருந்து மீதமுள்ள பணம் மற்றும் பொருட்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அசையவே இல்லை! நேபாள வெள்ளத்தில் கம்பீரமாக நின்ற ஒரே வீடு! இணையத்தில் வைரலாகும் வீடியோ!