நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? அறிக்கை கொடுங்க! மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு!
முழுமையான தகவலை அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், காணாமல் போனவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சென்னை: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணத்தைச் சேர்ந்த தனியார் பயண நிறுவனம் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி நேபாளத்துக்கு சென்றுள்ளனர். மூன்று நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 26-ம் தேதி அங்கு திடீரென ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் அவர்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்ட சிலர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
நேபாளம் சென்ற 57 பேரில் யார் மீட்கப்பட்டுள்ளனர், யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், யார் தொடர்ந்து காணாமல் போயுள்ளனர் என்பது குறித்த முழுமையான தகவலை அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், காணாமல் போனவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: இந்தியாவுடன் கைகோர்த்த அமெரிக்க மீட்புக்குழு! மண்ணுக்குள் சிக்கிய 600 பேர் கதி என்ன? தீவிரமடையும் மீட்புப் பணி!
இதுதொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் பர்வேஷ் முஷ்ரப், ஐகோர்ட்டின் மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். பின்னர் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், தமிழகத்தில் இருந்து கைலாச யாத்திரைக்கு சென்ற 305 பேரில் 220 பேர் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மீதமுள்ள 85 பேரை மீட்க தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்ட காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அரசின் செலவில் காத்மாண்டுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: நேபாளத்துக்கு மீண்டும் பறந்த இந்திய விமானம்! தொடரும் மீட்புப் பணி! குவியும் மருந்துகள், மீட்புப் படையினர்!