×
 

சேலையில் கட்டி... ஹாலிவுட்டையே மிஞ்சிய திகில் சம்பவம்... நேபாளத்தில் இருந்து தப்பி வந்த தமிழர்கள் ‘திக் திக்’ பேட்டி...!

சுனாமி அலையைப் பார்த்திருப்போம் அல்லவா? அதேபோல் கற்களும் மண்ணும் கலந்த ஒரு மிகப்பெரிய அலைபோன்று, சுமார் 70 முதல் 80 அடி உயரத்திற்கு சுருண்டு வருவது போல் அந்த வெள்ளம் வந்தது.

நேபாளத்தில் இருந்து சென்னை வந்தவர்களில் நான் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வரும் சத்யா என்பவர் அளித்துள்ள பேட்டியில், நாங்கள் அனைவரும் மானசரோவர் - கைலாஷ் யாத்திரைக்காக மொத்தம் 57 பேர் கொண்ட குழுவாகச் சென்றோம். சென்னை, மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனைவரும் எங்களுடன் பயணம் செய்தனர்.

புறப்படும்போது அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். இது ஒரு மிகப்பெரிய புனிதப் பயணம் என்ற எண்ணத்தில்தான் அனைவரும் கிளம்பிச் சென்றோம்.

முதல் நாள் காத்மாண்டுவில் தங்கினோம். இரண்டாவது நாள் சியா புஜிஸ் என்ற இடத்தில் தங்கியிருந்தோம். மறுநாள் காலை 8 மணிக்கு சீனாவில் குடியேற்றச் சோதனை நடைபெற இருந்தது. அதற்காக அதிகாலை 6 மணிக்கே நாங்கள் புறப்பட்டோம்.

இதையும் படிங்க: நேபாள மீட்பு பணிகள்! வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு!

நாங்கள் மூன்று பேருந்துகளில் பயணம் செய்தோம். முதல் பேருந்து எங்களைக் கடந்து முன்னால் சென்றுவிட்டது. நாங்கள் இரண்டாவது பேருந்தில் இருந்தோம். மூன்றாவது பேருந்து எங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென மண் புழுதி கிளம்புவது போன்ற ஒரு காட்சி எங்களுக்குத் தெரிந்தது. முதலில் ஏதோ புழுதி கிளம்புகிறது என்றுதான் நினைத்தோம். சிலர் அதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். இயற்கை அழகாக இருக்கிறது என்றுதான் அப்போது நினைத்தோம்.

ஆனால், சிறிது நேரத்தில் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.

சுனாமி அலையைப் பார்த்திருப்போம் அல்லவா? அதேபோல் கற்களும் மண்ணும் கலந்த ஒரு மிகப்பெரிய அலைபோன்று, சுமார் 70 முதல் 80 அடி உயரத்திற்கு சுருண்டு வருவது போல் அந்த வெள்ளம் வந்தது.

இதுபோன்ற காட்சிகளை நாங்கள் ஆங்கிலப் படங்களில்தான் பார்த்திருக்கிறோம். நிஜ வாழ்க்கையில் அப்படி ஒரு காட்சியைப் பார்த்ததே இல்லை.

எங்களுக்கு அருகில் இருந்த அனைவரும் திடீரென ஓடத் தொடங்கினார்கள். அப்போதுகூட இந்த சம்பவத்தின் தீவிரம் எங்களுக்கு முழுமையாகப் புரியவில்லை. பின்னர் திரும்பிப் பார்த்தபோதுதான் எங்களுடைய ஓட்டுநரைக் காணவில்லை.

அங்கு இருந்த இரண்டு போலீஸ்காரர்களும் வெளியே ஓடி வந்து, பேருந்துக்குள் இருந்தவர்களை உடனடியாக வெளியேறச் சொன்னார்கள். அப்போதுதான் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டிருப்பதை நாங்கள் உணர்ந்தோம்.

அங்கிருந்தவர்கள் அனைவரும் உடனடியாக பேருந்திலிருந்து இறங்கி ஓடுமாறு கூறினார்கள். கையில் இருந்த பொருட்களை அப்படியே பிடித்துக்கொண்டு, ஓட்டுநர் இருக்கை வழியாக நாங்கள் வெளியே குதித்தோம்.

கீழே இறங்கிப் பார்த்தபோது, எங்களுடைய கணுக்காலைத் தாண்டும் அளவுக்கு சேறு இருந்தது.

அந்த மழை பெய்ததால் மேலே செல்வதற்கான பாதையே இல்லாமல் போயிருந்தது. சாதாரணமாக மலைப்பாதையில் நான்கு அடி ஏறினால், ஐந்து அடி கீழே சறுக்கி விழும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.

முதலில் ஆண்கள் சிலர் மேலே ஏறத் தொடங்கினார்கள். அங்கு ஒரு கேபிள் இருந்தது. ஒருவர் அந்த கேபிளைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறினார். பின்னர் மேலே சென்றவர்கள் அந்த கேபிளை கீழே போட்டு, மற்றவர்களையும் மேலே வருவதற்கு உதவி செய்தார்கள்.

அந்த கேபிளைப் பிடித்துக்கொண்டு வயதில் இளையவர்கள் சிலர் மேலே ஏறிவிட்டார்கள். ஆனால், எங்களைப் போன்ற வயதானவர்களால் அவ்வளவு எளிதாக ஏற முடியவில்லை.

நான் ஒரு மரத்தின் மீது அமர்ந்துகொண்டு, வெள்ளம் எப்போது வரும், தண்ணீர் கால்வரை வருமா, காலுக்கு மேலே வருமா என்ற அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அப்போது அங்கு ஒரு பெண் இருந்தார். அவர் தொடக்கக் கல்வி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் மேலே சென்று, தனது சேலையை கழற்றி கீழே வீசினார்.

அந்தச் சேலையைப் பிடித்துக்கொண்டு நான் மேலே ஏறினேன். மேலும் நான்கு பேரால் அந்தச் சேலையைப் பிடித்துக்கொண்டு ஏற முடியவில்லை. எனவே, அவர்கள் அந்தச் சேலையை இடுப்பில் கட்டிக்கொண்டார்கள். மேலே இருந்தவர்களும் கீழே இருந்தவர்களும் சேர்ந்து அந்தச் சேலையைப் பிடித்து இழுத்து அவர்களை மேலே கொண்டு வந்தோம்.

அப்படியே முதல் நாள் முழுவதும் போராடி மேலே சென்றோம்.

மேலே சென்றபோது ஒரு முகாம் இருந்தது. அது ஒரு முகாம். நல்ல வேளையாக, நாங்கள் இறங்கி நடந்து சென்றபோது அந்த முகாம் இருந்ததால், அங்கு சென்று தங்க முடிந்தது.

அங்கு சென்றவுடன் எங்களுக்கு தேவையான தண்ணீர் உள்ளிட்ட உதவிகளை அவர்கள் சிறப்பாக செய்தார்கள்.

மறுநாள் காலையில் அங்கிருந்து ஹெலிகாப்டர் முகாமுக்குச் செல்வதற்காகப் புறப்பட்டோம்.

அங்கு செல்லும் வழியில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடக்க வேண்டியிருந்தது. அந்த மூன்று மணி நேரமும் மிகவும் கடினமான பயணமாக இருந்தது.

சரிவான பாதையில் நடக்கும்போது, புல்லைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறினால், அந்தப் புல்லும் கையோடு வந்துவிடும். கீழே விழும் நிலை ஏற்பட்டது. என் கைகளைப் பாருங்கள்; முழுவதும் முள் குத்திய காயங்கள் உள்ளன.

இருபுறமும் இருந்த மரங்களைப் பிடித்துக்கொண்டும், முள் செடிகளைப் பிடித்துக்கொண்டும் தான் நாங்கள் அந்த மூன்று மணி நேரப் பயணத்தையும் மேற்கொண்டோம்.

எங்களுடன் வந்த அனைவரும் ஒருவருக்கொருவர் அவ்வப்போது உதவி செய்துகொண்டே சென்றோம். அதற்குப் பிறகு, என்னுடைய தம்பி தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்றி வருகிறார். முதலில் யாரைத் தொடர்புகொள்வது என்றே எங்களுக்குத் தெரியவில்லை.

நாங்கள் அவரிடம் தகவல் தெரிவித்தோம். அவர் உடனடியாக, “முதலில் முதலமைச்சருக்கு தகவல் தெரிவியுங்கள். நாங்கள் இந்த மாதிரியான ஒரு ஆபத்தில் சிக்கியிருக்கிறோம்” என்று கூறினார்.

அடுத்த நொடியே முதலமைச்சர் அவர்கள் எங்களைப் பற்றி தகவல் பெற்று, உடனடியாக டெல்லியுடன் தொடர்புகொண்டார். பிரதமரிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கிருந்து எங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அரசு சார்ந்த அனைத்து உதவிகளும் எங்களுக்கு உடனடியாக கிடைத்தன. எந்த இடத்திலும் யாரையும் குறை கூறுவதற்கு எங்களுக்கு ஒன்றுமே இல்லை. அந்த அளவுக்கு அனைவரும் எங்களுக்கு உதவி செய்தார்கள். ஒரு தங்கத் தட்டில் வைத்து அழைத்து வருவது போல எங்களைப் பாதுகாப்பாக மீட்டு, மீண்டும் தமிழ்நாட்டு மண்ணில் எங்களை கால் பதிக்க வைத்திருக்கிறார்கள். இதற்காக முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறையினருக்கும் எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் எனக்கூறினார். 

இதையும் படிங்க: விடிந்ததுமே பேரிடி... உலகையே உறைய வைத்த நேபாளம் பேரழிவு... காணாமல் போனவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share