×
 

ஈரானின் ஏவுகணை தயாரிக்கும் திறன் காலி! போர் விரைவில் முடியும்! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்!

யுரேனியம் செறிவூட்டும் திறனையும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிக்கும் திறனையும் ஈரான் இழந்துவிட்டதால் போர் விரைவில் முடிவுக்கு வரும்' என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்தும் தாக்குதல்களால் ஈரான் தனது முக்கிய ராணுவ திறன்களை இழந்துவிட்டதாக உறுதியாகத் தெரிவித்துள்ளார். யுரேனியம் செறிவூட்டும் தொழிற்சாலைகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிப்பு திறன் உள்ளிட்டவை முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதாக அவர் கூறினார். 

“ஈரான் அழிக்கப்பட்டு வருகிறது. மக்கள் நினைப்பதைவிட போர் விரைவில் முடிவடையும்” என்று நெதன்யாகு வலியுறுத்தினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தான் ஒரே கருத்தில் இருப்பதாகவும், டிரம்புக்கு உலகம் பெரும் கடமைப்பட்டிருப்பதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார். 

ஈரானின் அணு ஆயுத உற்பத்திக்கான தொழிற்சாலைகள், ஏவுகணை மற்றும் ட்ரோன் கிடங்குகள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகவும், விரைவில் முழுமையாக அழிக்கப்படும் என்றும் நெதன்யாகு தெரிவித்தார். இருப்பினும், ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு தளங்கள் மீதான கூடுதல் தாக்குதல்களை அதிபர் டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இதையும் படிங்க: கேஸ் விலை உயர வாய்ப்பு?! கத்தாரை கதறவிடும் ஈரான்! எரிவாயு ஏற்றுமதியில் விழுந்த ஓட்டை!

இந்தக் கருத்துக்கு சில மணி நேரங்களுக்குள் பதிலளித்த ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ஜெனரல் அலி முகமது நைனி, “எங்கள் ஏவுகணை தயாரிப்புத் திறன் குறையவில்லை. எதிரிகள் சோர்வடையும் வரை போர் தொடரும்” என்று சவால் விட்டிருந்தார். ஆனால், அந்த அறிக்கையை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் நைனி கொல்லப்பட்டார். இது ஈரானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, உலகையே அதிர வைத்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அமெரிக்காவின் அதிநவீன ஸ்டெல்த் போர் விமானமான F-35 லைட்னிங்-2, ஈரான் ஏவுகணையால் தாக்கி வீழ்த்தப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. இது உலக வரலாற்றில் F-35 முதல் முறையாக எதிரி தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் ஆகும். கடந்த மூன்று வாரங்களில் அமெரிக்கா 16 விமானங்களை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் தரப்பில் பதிலடி தொடர்கிறது. குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட நாடுகளின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எரிவாயு கிடங்குகள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. குவைத்தின் மினா அல்-அஹ்மதி நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஈரான் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் இஸ்ரேலால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி, “எதிரிகளின் பாதுகாப்பை நாம் பறிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார். இதனால் போர் மேலும் தீவிரமடையும் அபாயம் உள்ளது. 

இதையும் படிங்க: ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர்! இந்திய விமான நிறுவனங்களுக்கு பறந்த ஹை அலர்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share