மீண்டும் கொரோனாவா? சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு! HKU5-CoV-2 என்றால் என்ன?
கடந்த 2020ம் ஆண்டு உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் போன்று மற்றொரு வைரஸை சீனாவில் உள்ள வுஹான் இன்ஸ்டியூட் ஆஃப் வைரலாஜி மையத்தில் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வவ்வாள்களில் இருந்து இந்த வைரஸ் உருவாகியுள்ளது, கொரோனாவின் சார்ஸ்கோவிட் எந்த வழியாக மனிதர்களை தாக்கி, உயிரிழக்க வைத்ததோ, பாதித்ததோ அதே வழியாகவே இந்த வைரஸும் வரும். இந்த வைரஸ் இதுவரை சீனாவில் எந்த மனிதர்களிடமும் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆய்வுகத்தில் இருந்த வவ்வாள்களில் மட்டும்தான் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியையடுத்து, சர்வதேச சந்தையில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகள் விலை திடீரென அதிகரித்தன.
ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் “ சீனாவைச் சேர்ந்த அறிவியல் வல்லுநர்கள் ஜார்னல் செல் என்ற இதழில் வெளியிட்ட தகவலில் வுஹான் ஆய்வகத்தில் வவ்வாள்களிடம் இருந்து கண்டறிந்த புதிய வைரஸின் பெயர் HKU5-CoV-2 என்பதாகும். சார்ஸ் கோவிட் வைரஸைப் போல் எளிதாக மனிதர்கள் உடலுக்குள் நுழையாது. ஆதலால் மனிதர்களுக்கு இந்த வைரஸால் இப்போதைக்கு ஆபத்து இல்லை, அதை பெரிதாக சித்தரிக்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதில் உள்ள சிக்கல்கள்.. விதிகளை மறுஆய்வு செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!
புதிய வைரஸ் எப்படி பரவும்: கோவிட்-19 வைரஸைப போன்றுதான் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட HKU5-CoV-2 வைரஸும் ஒத்த குணங்களை கொண்டுள்ளது. மனிதர்களின் நுரையீரல் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும், கொரோனா வைரஸ் குடும்பங்கள் அனைத்தும், HKU கொரோனா வைரஸில் இருந்து வந்தவை. SARS-CoV-2 வைரஸ் போலவே, புதிய வைரஸும் புரதப்பிளவு(ஃபுரின் பிளவு தளம்) எனப்படும் ஒரு அம்சத்தைக் கொண்டுள்ளது, இது செல் மேற்பரப்புகளில் உள்ள ACE2 புரதம் வழியாக செல்களுக்குள் நுழைய உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். HKU5-CoV-2 வைரஸ், கொரோனா வைரஸ் போன்றே காற்று வழியாகவும், பாதிக்கப்பட்டவரின் எச்சில் போன்றவை வழியாகவும் மனித செல்களுக்குள் ஊடுருவுகின்றன.
இப்போதுதான் வவ்வாள்களிடம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸின் வீரியம் என்ன, மனிதர்களை பாதிக்குமா, விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுமா என்பதை ஆய்வாளர்களால் உறுதி செய்ய முடியவில்லை. ஒவ்வொரு கொரோனா வைரஸும் மனிதர்களை தாக்காது, கொரோனா வைரஸ் என்பது பெரிய குடும்பம், இது பொதுவான சளி, இருமல், ஜலதோஷம் தொடங்கி, நுரையீல் பாதிப்பு வரை ஏற்படுத்தக்கூடிய பலவகை வைரஸ். ஆனால், இவை கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவை, அதிலிருந்து பிரிந்து வீரியத்தை வளர்த்துக்கொண்டன. மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் பிரிவு வல்லுநர் மைக்கேல் ஓஸ்டர்ஹோம் கூறுகையில் “HKU5-CoV-2 பற்றிய ஆய்வுக்கான எதிர்வினை மிகைப்படுத்தப்பட்டுல்ளது” எனத் தெரிவித்தார்.
அறிகுறிகள் என்ன, எப்படி தடுக்கலாம்: இந்த HKU5-CoV-2 வைரஸ் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் கொரோனா பாதித்தவர்கள் போல், காய்ச்சல், இருமல், தலைசுற்றல், கடும்குளிர், சுவை,மனம் உணர்தல் நிறுத்தம், வயிற்றுப்போக்கு, மூச்சுவிடுதலில் சிரமம், மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும். கொரோனா வைரஸில் இருந்து நாம் எப்படி பாதுகாத்துக்கொண்டோமோ அதேபோல் முகக்கவசம் அணிதல், கைகளை நன்றாகக் கழுவுதல், பரிசோதனை செய்தல் ஆகியவை மூலம் பரவாமல் தடுக்கலாம்.
இதையும் படிங்க: பூமியை நோக்கி வேகமாக வரும் 'சிட்டி டெஸ்ட்ராயர்' விண்கல்... வழியிலேயே தாக்கி அழிக்க "நாசா" திட்டம்..!