நைஜீரியாவில் பயங்கர விமான விபத்து! 32 பேரும் பலி! அதிபர் டினுபு எடுத்த அதிரடி முடிவு!
இந்த விபத்து தொடர்பான தகவல் வெளியானதும் நைஜீரிய அதிபர் போலா டினுபு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
நைஜீரியாவில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 32 பேரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணத்தை கண்டறிய விரிவான விசாரணை நடத்த நைஜீரிய விமானப்படைக்கு அந்நாட்டு அதிபர் போலா டினுபு உத்தரவிட்டுள்ளார்.
நைஜீரிய விமானப்படைக்கு சொந்தமான ATR-42 ரக விமானம், பெனின் நகரில் இருந்து லாகோஸ் நோக்கி வழக்கமான பணிக்காக புறப்பட்டுச் சென்றது. விமானத்தில் 25 பயணிகள் மற்றும் 7 விமானப்படை பணியாளர்கள் என மொத்தம் 32 பேர் இருந்தனர். விமானம் தென்மேற்கு நைஜீரியாவின் ஒண்டோ மாகாணத்தில் உள்ள இக்போகோடா பகுதியில் சென்றபோது விபத்தில் சிக்கியது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன. பின்னர் கடற்படை தளத்திற்கு அருகிலுள்ள பகுதியில் விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையும் படிங்க: காங்கோவில் பயங்கர விமான விபத்து! 2 மூத்த ராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் பலி!
இந்த விபத்து தொடர்பான தகவல் வெளியானதும் நைஜீரிய அதிபர் போலா டினுபு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். ராணுவத்தினரின் குடும்பங்களுக்கு தனது அனுதாபத்தைத் தெரிவித்த அவர், இந்த சம்பவம் நாட்டுக்கும் ஆயுதப்படைகளுக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
மேலும், விமானப்படை தலைமைத் தளபதி தமக்கு சம்பவம் குறித்து விளக்கம் அளித்ததாக தெரிவித்த அதிபர் டினுபு, விபத்து எப்படி ஏற்பட்டது என்பதை முழுமையாக கண்டறிய உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் காரணங்கள் ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நைஜீரியாவில் உயிரிழந்த விமானப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அதிபர் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பயங்கர விமான விபத்து! 2 பேர் பலி; 2 பேர் படுகாயம்!