அமெரிக்காவை எதிர்க்க யாருக்கும் தெம்பில்லை... காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி பரபரப்பு பேட்டி!
ஈரானில்அயதுல்லா ஆட்சி கொடூரமான ஆட்சி-அமெரிக்காவை எதிர்த்து யாரும் போர் புரிவதற்கு துணிந்தவர்கள் இல்லை என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று நடைபெற்ற தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் திறப்பு விழாவில் பங்கேற்ற சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், சர்வதேச அரசியல் மற்றும் தமிழகத் தேர்தல் களம் குறித்துப் பல்வேறு அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஈரான் உச்சத் தலைவர் கமேனி படுகொலை குறித்துப் பேசிய அவர், ஈரானில் நிலவியது ஒரு கொடூரமான ஆட்சி. சொந்த மக்களையும், சிறுவர்களையும் நசுக்கி, தூக்குத் தண்டனை விதித்த அந்த ஆட்சிக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை; அங்கு மாற்றம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்த மாற்றம் மற்றொரு நாட்டின் தலையீட்டால் வரக்கூடாது என்பதே என் எண்ணம் என்று குறிப்பிட்டார்.
தற்போதையச் சூழலில் உலகப்போர் வர வாய்ப்பில்லை எனத் தெரிவித்த அவர், இன்று அமெரிக்காவை எதிர்த்துப் போர் புரியும் துணிச்சலோ அல்லது அந்த அளவிற்கானத் தொழில்நுட்பமோ உலகில் வேறு எந்த நாட்டிடமும் இல்லை. சீனாவிடம் அந்தத் தகுதி இருந்தாலும், அவர்கள் வர்த்தக ரீதியாகவே கையாளுவார்கள்; போருக்குச் செல்லமாட்டார்கள் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜகவால் அதிமுகவின் வாக்கு வங்கி சிதையும்! காஞ்சிபுரத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி பேட்டி!
போர்ச் சூழலால் துபாயில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தற்போதைக்குச் சாத்தியமற்றது என்றும், விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் அவர்கள் அங்கேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த அவர், "கூட்டணியை மிகவும் லாவகமாகக் கொண்டு செல்வது ஸ்டாலினின் சாதுர்யம். 2026 தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியே மாபெரும் வெற்றி பெறும். அதிமுக மற்றும் பாஜக தங்களது கூட்டணியைப் பற்றித்தான் கவலைப்பட வேண்டுமே தவிர, எங்களைப் பற்றி அல்ல" எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் வருவதை வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், திருப்பரங்குன்றம் மட்டுமல்லாமல் ஆறுபடை வீடுகளுக்கும் அவர் செல்ல வேண்டும்; இப்போதுதான் அவருக்கு முருகன் அருள் கிடைக்கிறது என நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
மேலும், 234 தொகுதிகளையும் கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக பிரித்துக் கொள்ளும் என்றும், காங்கிரஸ் - திமுக இடையே எந்த சிக்கலும் இல்லை என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.
இதையும் படிங்க: “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!