×
 
☰

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2026: அமெரிக்க நிபுணர்கள் ராபர்ட் ஹால், மைக்கேல் வுட்ஃபோர்ட் சாதனை!

2026 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ராபர்ட் இ ஹால் மற்றும் மைக்கேல் வுட்ஃபோர்ட் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு (ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக வழங்கப்படும் ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் பொருளாதார அறிவியல் பரிசு), அமெரிக்கப் பொருளாதார நிபுணர்களான ராபர்ட் இ. ஹால் (Robert E. Hall) மற்றும் மைக்கேல் வுட்ஃபோர்ட் ஆகியோருக்குக் கூட்டாகப் பகிர்ந்து வழங்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி இன்று பிற்பகல் இந்த ஆண்டிற்கான பொருளாதார நோபல் பரிசு அறிவிப்பை வெளியிட்டது. நடப்பு ஆண்டின் நோபல் வாரத்தின் இறுதி அறிவிப்பாக அமைந்த இந்தப் பொருளாதாரப் பரிசு, உலகப் பொருளாதாரக் கொள்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஆய்வுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பேரியல் பொருளாதார நிலைத்தன்மைக்கான நுண்ணிய பொருளாதார அடித்தளங்கள் குறித்த இவர்களது ஆழமான ஆய்விற்காக இந்த உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள், பணவீக்கக் கட்டுப்பாடு மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகிதக் கொள்கைகள் தனிநபர் மற்றும் நிறுவனங்களின் பொருளாதார முடிவுகளோடு எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்பதைத் தங்களது நவீன ஆய்வுகள் மூலம் இவர்கள் நிறுவியுள்ளனர்.

இதையும் படிங்க: 2026 நோபல் இலக்கியப் பரிசு: ஆனி கார்சனுக்கு கிடைத்த உயரிய அங்கீகாரம்..!!

விருது வென்ற ராபர்ட் இ. ஹால், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் ஹூவர் இன்ஸ்டிடியூட் மூத்த உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். மைக்கேல் வுட்ஃபோர்ட், கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் சர்வதேச அளவில் மதிக்கப்படும் பணவியல் பொருளாதார நிபுணராகவும் திகழ்கிறார். உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கத்தைச் சமாளிக்க மத்திய வங்கிகள் வகுக்கும் கொள்கைகளுக்கு இவர்களது கோட்பாடுகள் உறுதியான வழிகாட்டியாக அமைந்துள்ளன.

நோபல் பதக்கம், பட்டயம் மற்றும் 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (சுமார் ரூ.8.8 கோடி) ரொக்கப் பரிசு ஆகியவை இவ்விரு பொருளாதார மேதைகளுக்கும் சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படவுள்ளது. இவ்விருது வரும் டிசம்பர் 10-ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் முறைப்படி வழங்கப்படும்.

இதையும் படிங்க: 2026 இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு! ஐஸ்கியூப் சாதனையாளர் பிரான்சிஸ் ஹால்சனுக்கு கௌரவம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share