×
 
☰

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகள்.. கொரிய தீபகற்பத்தில் உச்சமடையும் பதற்றம்!!

ஆத்திரமடைந்த வடகொரியா தனது அணுஆயுத வல்லமையை வலுப்படுத்தும் நோக்கில் ஏவுகணைச் சோதனைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.

சமீபத்திய தொடர் ஆயுதச் சோதனைகளின் ஒரு அங்கமாக, வடகொரியா தனது கிழக்குக் கடற்பகுதியை நோக்கி பல புதிய அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென்கொரிய ராணுவம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 9.20 மணியளவில் தலைநகர் பியாங்யாங்கைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டன. சமீப ஆண்டுகளில் விமான நிலையத்தை முக்கிய ஏவுதளமாகப் பயன்படுத்தி வரும் வடகொரியா, இந்த முறையும் அதே பகுதியைத் தேர்வு செய்துள்ளது.

ஜப்பான் மற்றும் தென்கொரியாவின் ராணுவத் தரவுகளின்படி, குறைந்தது இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் கிழக்குக் கடலை நோக்கிச் செலுத்தப்பட்டன. அவற்றில் ஒன்று 900 கிலோமீட்டருக்கும் அதிக தூரம் பயணித்து, ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே உள்ள கடற்பரப்பில் விழுந்தது.

இதையும் படிங்க: சென்னை மடிப்பாக்கத்தில் தகராறு! வீட்டுக்கே வந்து கணவன், மனைவியை தாக்கிய போதை ஆசாமிகள்!

ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது. எனினும், ஏவுகணைகளின் சரியான எண்ணிக்கை மற்றும் அவை பறந்த தூரம் குறித்த முழுமையான விவரங்களைத் தென்கொரிய கூட்டுப்படைத் தளபதிகள் உடனடியாக வெளியிடவில்லை. இந்தச் சோதனைகள் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

கொரிய தீபகற்பத்தில் நீண்டகாலமாக நிலவும் மோதல் போக்கு இந்தச் சோதனைகளால் மேலும் தீவிரமடைந்துள்ளது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்து வருவதோடு, அவ்வப்போது கூட்டுப் போர் ஒத்திகைகளையும் நடத்தி வருகிறது. அண்மையில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ஐந்து நாள் பிரமாண்ட கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன. இதில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை பங்கேற்றன. இதனால் ஆத்திரமடைந்த வடகொரியா தனது அணுஆயுத வல்லமையை வலுப்படுத்தும் நோக்கில் ஏவுகணைச் சோதனைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.

முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும் நோக்கில் கூட்டுப் பயிற்சிகளை நிறுத்திவைப்பதாக அறிவித்திருந்தார். ஆனால் நீண்டகாலமாக முடங்கியுள்ள ராஜதந்திர பேச்சுவார்த்தைக்கான சலுகைகளை வடகொரியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. கடந்த வாரம் தென்கொரியா தனது முதல் அதிநவீன ஹைப்பர்சோனிக் ஆயுதத்தை விமானத்தில் சோதனை செய்த சில நாள்களுக்குப் பிறகு, அதற்குப் பதிலடியாகவே வடகொரியா இந்தச் சோதனையை நடத்தியுள்ளது என்று தென்கொரிய அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.

கடந்த மாதம் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் மூன்று தென்கொரிய வீரர்கள் காயமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் மேலும் மோசமடைந்துள்ளது. வடகொரியா தென்கொரியாவைத் தனது நிரந்தர எதிரியாக அறிவித்து, அனைத்து ராஜதந்திர மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளையும் முற்றிலுமாக துண்டித்துள்ளது. இந்தத் தொடர்ச்சியான சோதனைகள் பிராந்திய பாதுகாப்புக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன.

இதையும் படிங்க: ரூ.300 கோடியில் பிரம்மாண்டம்..! "பெரியார் அறிவுலகம்".! திறந்து வைக்கும் முதல்வர் விஜய்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share