வளைகுடா நாடுகளின் வளங்கள் சூறை! ஈரான் தாண்டவம்! கத்தார் எரிவாயு நிலையம் சேதம்! கச்சா எண்ணெய் விலை உயர்வு!
வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்களை குறிவைத்து ஈரான் நேற்று நடத்திய கடும் தாக்குதல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்து பீப்பாய் 114 அமெரிக்க டாலரை எட்டியது.
மேற்காசியாவில் தொடர்ந்து மூன்று வாரங்களாக நீடிக்கும் இஸ்ரேல்-அமெரிக்கா vs ஈரான் போர் இப்போது எரிசக்தி யுத்தமாக மாறியுள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான், வளைகுடா நாடுகளின் முக்கிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையங்களை குறிவைத்து நேற்று கடும் தாக்குதல் நடத்தியது.
இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 6 சதவீதம் உயர்ந்து, ஒரு பீப்பாய் 114 அமெரிக்க டாலரை எட்டியது. பிப்ரவரி 28-ம் தேதியுடன் ஒப்பிடும்போது இது 57 சதவீத உயர்வாகும்.
போர் பிப்ரவரி 28 அன்று அணுசக்தி அச்சுறுத்தல் காரணமாகத் தொடங்கியது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் தாக்கி வரும் நிலையில், இஸ்ரேல் நேற்று முன்தினம் ஈரானின் மிக முக்கியமான சவுத் பார்ஸ் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையத்தை தாக்கியது.
இதையும் படிங்க: கார்க் தீவு மீதான தாக்குதல் தீவிரமாகும்!! ஜாலிக்கு கூட தாக்குவோம்! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் மிரட்டல்!
உலகின் மிகப் பெரிய எல்.என்.ஜி. (இயற்கை எரிவாயு) உற்பத்தி மையங்களில் ஒன்றான இந்த நிலையம் ஈரானின் பொருளாதாரத்துக்கு முக்கிய ஆதாரம். இதை பலவீனப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் ஈரானை ஆத்திரமடையச் செய்தது.
ஆத்திரமடைந்த ஈரான் உடனடியாக பதிலடி கொடுத்தது. கத்தாரின் ராஸ் லபான் (Ras Laffan) இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையத்தை ஈரானின் ஏவுகணைகள் தாக்கின. இதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு உற்பத்தி முற்றிலும் தடைப்பட்டது.
கத்தார் எரிசக்தி அமைச்சர் சாத் அல் காபி கூறுகையில், “இந்தத் தாக்குதல் கத்தாரின் எல்.என்.ஜி. ஏற்றுமதித் திறனில் 17 சதவீதத்தை அழித்துவிட்டது. ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைக்கான விநியோகம் பெரிதும் பாதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதேபோல் சவுதி அரேபியாவின் சாம்ரெப் (SAMREF) கச்சா எண்ணெய் உற்பத்தி நிலையம், குவைத்தின் மினா அல் அகமதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சின் ஹப்சான் (Habshan) இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையமும் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகின. இந்தத் தாக்குதல்கள் உலகெங்கும் எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஆசிய சந்தையில் இயற்கை எரிவாயு விலை இரட்டிப்பாகியுள்ளது.
இந்தியாவுக்கு இது பெரும் சவாலாக மாறியுள்ளது. நம் நாடு இயற்கை எரிவாயு தேவையில் பெரும்பாலும் இறக்குமதியை நம்பியுள்ளது. 2024-ல் இந்தியா 2.7 கோடி டன் எரிவாயுவை இறக்குமதி செய்தது. அதில் 47 சதவீதம் அதாவது 1.2 கோடி டன் கத்தாரில் இருந்து வந்தது. தற்போது ராஸ் லபான் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், இந்தியாவுக்கான விநியோகம் குறையும் அபாயம் உள்ளது. உற்பத்தி மீண்டும் தொடங்க சில வாரங்கள் ஆகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் இயற்கை எரிவாயு மற்றும் சி.என்.ஜி. பயன்படுத்தும் தொழில்துறை, வாகனங்கள் மற்றும் வீடுகள் மாற்று எரிபொருளை நாட வேண்டிய நிலை ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உலகளாவிய எரிசக்தி நெருக்கடி இந்தியப் பொருளாதாரத்தையும் நேரடியாகப் பாதிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: கச்சா எண்ணெய் கப்பலை தகர்க்க சதி! கண்ணி வெடி வைக்கும் படகுகள்! தாக்கி அழிக்கும் அமெரிக்கா!