இன்று முதல் இந்த மாநிலங்களுக்கு வண்டி ஓடாது... தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஸ்டிரைக்...!
இன்று மாலை ஐந்து மணி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயங்காது என அறிவிப்பு
அதிகப்படியான வரி விதிப்பு காரணமாக கர்நாடகா, ஆந்திரா கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்கமாட்டோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் 7 சங்கங்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த ஆம்னி பேருந்துகள் முறையாக வரி செலுத்தவில்லை என்றும் ஒருமுறை கேரளாவுக்கு செல்வதற்கான தற்காலிக அனுமதியைப் பெற்று பேருந்துகள் இயக்கப்பட்டதாகக் கூறி கொச்சியில், 30 ஆம்னி பேருந்துகளுக்கு தலா ரூ.2 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை மொத்தம் ரூ.70 லட்சம் வரை நேற்று முன்தினம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க மாட்டோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில், தமிழகத்தை மட்டும் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் கேரளா போக்குவரத்து துறையினரால் திடீரென சிறைபிடிக்கப்பட்டு 70 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வந்தாரை வாழ வைக்கும் 'சென்னைக்கு' உயரிய தேசிய விருது..!! எதுல தெரியுமா..??
இதேபோன்று கடந்த ஏழு நாட்களாக கர்நாடகா போக்குவரத்து துறையும் தமிழக பதிவு எண் கொண்ட 60க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை தடுத்து, ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ.2.2 லட்சம் வரை அபராதம் விதித்து, மொத்தம் ரூ.1.15 கோடி வரை அபராதம் வசூலித்துள்ளது. இதற்கு அண்டை மாநிலங்கள் கூறும் காரணம் 2021 மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட்டின்படி தமிழகத்தில் இன்று வரை அண்டை மாநில பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கிறார்கள். எனவே நாங்களும் வசூலிக்கிறோம் என தெரிவிக்கிறார்கள் .
இந்த அபராத நடவடிக்கைகளின் காரணமாக, ஆபரேட்டர்கள் இரட்டை வரியும் அபராதங்களும் செலுத்த இயலாத சூழலில் உள்ளோம். இந்நிகழ்வை தொடர்ந்து கடந்த 7ம் தேதி முதல் தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு இயக்கப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளோம். இதனால் இரு மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. தமிழகத்திலிருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் தமிழக பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
மாநிலங்களுக்கு இடையை இயக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு காலாண்டிற்கு (90 நாட்கள்) தமிழக சாலை வரி ரூ.1,50,000, ஏஐடிபி சாலை வரி ரூ90,000 மற்றும் கேரளா அல்லது கர்நாடகா சாலை வரி சுமாராக 2 லட்சம் ஆக மொத்தம் காலாண்டுக்கு ரூ.4,50,000 செலுத்தி பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்தப் பிரச்சினையில் இன்று மாலை 5 மணி முதல் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்பதை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த அனைத்து சங்கங்களும் ஒருமனதாக தெரிவித்துக் கொள்கிறோம்" இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவாவில் வெற்றிகரமாக நிறைவுற்ற அயர்ன்மேன் 70.3..!! இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!