×
 

இந்திய பெருங்கடலில் ஈரான் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்! 100 வீரர்களுக்கு மேல் பலி!

இந்தியாவில் பயிற்சியை முடித்து நாடு திரும்பிய ஈரானின் IRIS Dena போர்க்கப்பலை இலங்கை அருகே தாக்கி மூழ்கடித்ததாக அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

மத்திய கிழக்கு நாடுகளில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியப் பெருங்கடலில் நிலைகொண்டிருந்த ஈரானியப் போர்க்கப்பலான IRIS Dena-வை அமெரிக்கக் கடற்படை நீர்மூழ்கிக் குண்டு (Torpedo) மூலம் தாக்கி மூழ்கடித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஒரு எதிரி நாட்டின் போர்க்கப்பலை அமெரிக்கா டார்பிடோ மூலம் தாக்கி அழிப்பது இதுவே முதல்முறை என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை இன்று (மார்ச் 4) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட்டர் ஹெக்செத் (Pete Hegseth) இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "சர்வதேசக் கடற்பரப்பில் தங்களுக்குப் பாதுகாப்பு இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த ஈரானியப் போர்க்கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று வெற்றிகரமாகத் தாக்கி மூழ்கடித்துள்ளது. இதனை 'அமைதியான மரணம்' என்று அழைக்கலாம். 1945-க்குப் பிறகு டார்பிடோ மூலம் ஒரு எதிரிக் கப்பலை அமெரிக்கா மூழ்கடிப்பது இதுவே முதல்முறை என தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலுக்கு உள்ளான IRIS Dena போர்க்கப்பல், அண்மையில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற MILAN 2026 பல்தேசியக் கடற்பயிற்சியில் பங்கேற்றுவிட்டு ஈரான் திரும்பிக் கொண்டிருந்தது. இன்று அதிகாலை இலங்கை அருகே (காலி துறைமுகத்திலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில்) சென்றுகொண்டிருந்தபோது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் குறிவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை! அமெரிக்க குற்றச்சாட்டுகளை மறுத்த சர்வதேச அணுசக்தி முகமை!

கப்பலில் மொத்தம் 180 வீரர்கள் இருந்த நிலையில், தாக்குதல் நடந்தவுடன் கப்பல் முழுமையாக மூழ்கியது. இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை நடத்திய மீட்புப் பணியில் 32 வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டு காலி (Galle) அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 100-க்கும் மேற்பட்ட வீரர்களின் கதி என்னவென்று தெரியவில்லை; அவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சில உடல்களை இலங்கை கடற்படை மீட்டுள்ளது.

ஈரானின் வான்வெளி மற்றும் ஏவுகணைத் தளங்களை அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஏற்கனவே அழித்துள்ள நிலையில், தற்போது ஈரானின் கடற்படையையும் (Navy) முழுமையாக அழிப்பதே தங்களது இலக்கு எனப் பென்டகன் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 17 ஈரானியக் கப்பல்களை அமெரிக்கா அழித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இலங்கை அரசு இந்த மீட்புப் பணியைத் தனது சர்வதேசக் கடலோரத் தேடல் மற்றும் மீட்புப் பணி (Search and Rescue) கடமையின் ஒரு பகுதியாக மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்கா - இஸ்ரேலுக்கு எதிராக முழக்கம்! ஈரானுக்கு ஆதரவாக தமிழகத்தில் திரண்ட அரசியல் கட்சிகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share