×
 

பசிபிக்-ல் அச்சுறுத்தும் அதிதீவிர சூப்பர் டைஃபூன் ‘பாவி’.. தைவான், சீனாவுக்கு ஹை வார்னிங்..!!

தைவான், ஹாங்காங், ஜப்பான் இடையே நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உருவாகியுள்ள சூப்பர் டைபூன் பாவி (Bavi), வரலாற்றில் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த புயல்களில் ஒன்றாக உருமாறியுள்ளது. சீனாவின் தேசிய வானிலை மையம் வெளியிட்ட செயற்கைக்கோள் படங்களின்படி, இந்தப் புயல் சுமார் 9,40,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்துள்ளது. இது பிரான்ஸ் நாட்டின் மொத்த நிலப்பரப்பை விடப் பெரியது. ஜெஜியாங் மாகாணத்தை விட 9 மடங்கும், ஹாங்காங்கை விட 850 மடங்கும் பெரிய அளவில் உள்ளது.

இந்தப் புயல் தற்போது வடமேற்கு திசையில் மணிக்கு சுமார் 20 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. தைவானை ஒட்டி சென்று, நாளை (சனிக்கிழமை) இரவு சீனாவின் புஜியான் அல்லது ஜெஜியாங் மாகாணங்களுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, வட மரியானா தீவுகள் மற்றும் குவாம் பகுதிகளை கடுமையாகத் தாக்கிய இந்தப் புயல், அங்கு பலத்த சேதங்களை ஏற்படுத்தியது. தற்போது அதன் கண்ணின் அருகே காற்றின் வேகம் 200 கி.மீ. வரை எட்டக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தைவானில் பெரும் பாதிப்பு எதிர்பார்ப்பு: புயலின் தாக்கத்தை முன்னிட்டு தைவானில் இன்று பங்குச் சந்தைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. தலைநகர் தைபேயில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தைவான், ஹாங்காங், ஜப்பான் இடையே நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வடக்கு மலைப்பகுதிகளில் 40 செ.மீ. முதல் ஒரு மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால், சுமார் 29,000 ராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்குத் தயார் நிலையில் உள்ளனர். வரலாறு காணாத அளவிலான மழை, வெள்ளம், நிலச்சரிவு அபாயங்கள் உள்ளன.

இதையும் படிங்க: 285 நாள் சைலண்ட்..! இடைத்தேர்தல் ஸ்டண்ட்... இந்த விளம்பரம் தேவையா.? CM விஜயை சாடிய திமுக..!

சீனாவில் ஆரஞ்சு அலர்ட்: சீனா முழுவதும் உயர் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை நகரங்களில் ஏற்கெனவே பலத்த காற்றும் மழையும் தொடங்கியுள்ளன. கடுமையான இடி, ஆலங்கட்டி மழை மற்றும் சுழற்காற்று வீசும் அபாயம் உள்ளது. பெய்ஜிங்கில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, பள்ளிகள் மூடப்பட்டன. பொதுமக்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீனவர்கள் துறைமுகங்களில் தங்கியுள்ளனர்; விவசாயிகள் பயிர்களைப் பாதுகாக்க அவசர நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

ஜப்பானின் ரியூக்யூ தீவுகள் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை நிபுணர்கள் இந்தப் புயலை பல ஆண்டுகளில் மிக சக்திவாய்ந்த ஒன்றாகக் கருதுகின்றனர். மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். சேதங்களைத் தவிர்க்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் புயல் மேலும் வலுப்பெறலாம் அல்லது சற்று தளரலாம் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. உலக வானிலை அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் உடனடியாகத் தொடங்கும் வகையில் தயாரிப்புகள் முழுமையாக உள்ளன. மக்கள் அனைவரும் அதிகாரிகளின் அறிவுரைகளைப் பின்பற்றி பாதுகாப்புடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. 

இதையும் படிங்க: “எங்க அப்பா பீரோக்குள்ள இல்ல... இவங்க கூட செம்ம கூத்தா இருக்கு...” - திமுகவை பங்கமாய் கலாய்த்த விஜய்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share