ஆப்கானிஸ்தான் மீது குண்டுவீச்சு! கோரமுகம் காட்டிய பாக்.,! குழந்தைகள் உட்பட 13 பேர் பலி!
ஆப்கானிஸ்தானில் மீண்டும் பாகிஸ்தான் குண்டு வீசி வான்வெளி தாக்குதல் நடத்தியதில் 11 குழந்தைகள் உட்பட மொத்தம் 13 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்தியதாக கூறப்படும் புதிய வான்வழித் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்ததாக தலிபான் நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக எல்லைப் பகுதிகளில் பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வரும் நிலையில், எல்லை தாண்டிய தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான், தனது நாட்டுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு வழங்கி வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு பலமுறை மறுத்து வந்துள்ளது. இந்த சூழலில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் சிக்கலான நிலையை எட்டியுள்ளது.
இதையும் படிங்க: இந்து பெயர் சூட்ட தடை!! முஸ்லிம்கள் எதிர்ப்பால் முடங்கியது திட்டம்!! பாக்., லாகூர் தெருக்களில் பறிபோகும் பழைய பெயர்கள்!
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் குனார், கோஸ்ட் மற்றும் பக்திகா மாகாணங்களில் உள்ள பகுதிகள் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் வசிக்கும் வீடுகள் குறிவைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் வெளியிட்ட அறிக்கையில், “பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் வான்வெளியை மீறி பல இடங்களில் குண்டுவீச்சு நடத்தியுள்ளது. இதில் 11 குழந்தைகள், ஒரு முதியவர் மற்றும் ஒரு பெண் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இது மனிதாபிமானத்திற்கு எதிரான செயல். இந்த தாக்குதலையும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் ஆப்கானிஸ்தான் கடுமையாக கண்டிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் தரப்பில் உடனடி அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. இருப்பினும், தாக்குதல் குறித்த தகவல்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றம், தெற்காசியாவின் பாதுகாப்பு சூழலை மேலும் பாதிக்கக்கூடும் என்ற கவலை சர்வதேச வட்டாரங்களில் எழுந்துள்ளது. தாக்குதல் தொடர்பான உண்மை நிலையை கண்டறிய சுயாதீன விசாரணை தேவை என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் குறித்து கருத்து சொல்ல யாருக்கும் உரிமையில்லை!! சீனா, பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா!