'ஆர்டர் ஆப் அப்துல் அஜீஸ் அல் சவுத்' பாக்., தளபதி அசிம் முனீருக்கு உயரிய விருது வழங்கிய சவுதி அரேபியா!
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முப்படை தலைமைத் தளபதி, பீல்ட் மார்ஷல் அசிம் முனீருக்கு சவுதி அரேபியாவின் மிக உயரிய 'ஆர்டர் ஆப் அப்துல் அஜீஸ் அல் சவுத்' விருது வழங்கப்பட்டது.
ரியாத்: பாகிஸ்தான் முப்படைத் தலைமைத் தளபதியும் பீல்ட் மார்ஷலுமான ஜெனரல் அசிம் முனீருக்கு சவுதி அரேபியாவின் மிக உயரிய விருதான 'ஆர்டர் ஆப் அப்துல் அஜீஸ் அல் சவுத்' விருது வழங்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவுக்கு அரசுமுறைப் பயணமாக சென்ற அசிம் முனீருக்கு, சவுதி பாதுகாப்புத்துறை அமைச்சரும் இளவரசருமான காலித் பின் சல்மான் அல் சவுத் இந்த விருதை வழங்கினார்.
இந்த விருது சவுதி அரேபியாவின் நிறுவனரான அப்துல் அஜீஸ் அல் சவுத் பெயரில் வழங்கப்படும் மிக உயரிய கௌரவமாகும். தேசிய சேவை, சிறப்பான பங்களிப்பு, நட்பு நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக இது வழங்கப்படுகிறது.
அசிம் முனீருக்கு இந்த விருது வழங்கப்பட்டது, பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதிலும் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டியே என சவுதி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காசாவுக்கு பாக்., படையை அனுப்புங்க! அழுத்தம் தரும் ட்ரம்ப்! உள்நாட்டு எதிர்பால் கையை பிசையும் அசிம்!
விருது பெற்ற பிறகு பேசிய அசிம் முனீர், இது இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால சகோதரத்துவ உறவின் அடையாளம் என்று கூறி நன்றி தெரிவித்தார். பாகிஸ்தானும் சவுதி அரேபியாவும் பல தசாப்தங்களாக நெருக்கமான நட்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பேணி வருகின்றன. இந்த விருது அந்த உறவை மேலும் வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
குறிப்பிடத்தக்க வகையில், இதே 'ஆர்டர் ஆப் அப்துல் அஜீஸ் அல் சவுத்' விருது கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் வழங்கப்பட்டது. அப்போது அது இந்தியா - சவுதி உறவுகளை வலுப்படுத்தியதாகப் பார்க்கப்பட்டது.
தற்போது பாகிஸ்தான் ராணுவத் தலைவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது மத்திய கிழக்கு அரசியல் மற்றும் பாதுகாப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: தனிமையில் அடைத்து சித்திரவதை! கொலை செய்ய முயற்சி!! கண்ணீர் விடும் இம்ரான்கான்!