×
 

பாகிஸ்தான்ல இதுக்கு மேல விளையாட முடியாது!! உயிருக்கு உத்திரவாதம் இல்ல! இலங்கை வீரர்கள் கம்ப்ளைண்ட்!

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வரும் இலங்கை வீரர்கள், உடனடியாக நாடு திரும்ப முடிவு எடுத்துள்ளனர்.

பாகிஸ்தானில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, இலங்கை தேசிய அணியின் 8 வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப முடிவு செய்துள்ளனர். இது 2009ல் நடந்த பயங்கரவாத தாக்குதலை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது.

அப்போது இலங்கை அணியின் பேருந்தில் தாக்குதல் நடத்தப்பட்டதில் வீரர்கள் பலர் காயமடைந்தனர், பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கும் மேல் பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவில்லை. 2019 முதல் மட்டுமே பாகிஸ்தான் மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு தயாரானது.

அந்த வகையில், பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (ஓடிஐ) கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி பங்கேற்றது. மேலும், பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 தொடரிலும் விளையாட திட்டமிட்டிருந்தது. ராவல்பிண்டி மைதானத்தில் நடந்த முதல் ஓடிஐயில் பாகிஸ்தான் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்து, இஸ்லமாபாத்தில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.

இதையும் படிங்க: எல்லாம் மகளிருக்காக தான்... ரூ.40 கோடியில் நடமாடும் மருத்துவ ஊர்திகள்... நேரில் பார்வையிட்ட முதல்வர்...!

இஸ்லமாபாத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதல், ராவல்பிண்டி மைதானத்திற்கு அருகில் நடந்ததால், இலங்கை வீரர்கள் பெரும் அச்சத்தை உணர்ந்தனர். இது பாகிஸ்தான்-இலங்கை கிரிக்கெட் தொடருக்கு நேரடி அச்சுறுத்தலாக மாறியது.

வீரர்கள் பாகிஸ்தான் மண்ணில் மேலும் போட்டிகளில் விளையாட மறுத்துவிட்டனர். இரண்டாவது ஓடிஐ இன்று (நவம்பர் 13) நடைபெற வேண்டிய நிலையில், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு 8 வீரர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பினர். இதனால், இரண்டாவது ஓடிஐ ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் (எஸ்எல்சி) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “பாதுகாப்பு காரணங்களால் சில வீரர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் தயாராக உள்ளனர்.

திட்டமிட்டபடி, ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறும். வீரர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்குவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) உறுதியளித்துள்ளது. தொடரில் இருந்து பாதியில் வெளியேற விரும்பும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வாரியம், வீரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து, அவர்களை தொடரில் தங்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மற்றும் பிசிபி தலைவர் மோஷின் நக்வி, இலங்கை வீரர்களை சந்தித்து பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தார்.

இருப்பினும், சில வீரர்கள் குடும்ப உறுப்பினர்களின் அச்சத்தால் திரும்பினர். இந்த சம்பவம், பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. மேலும், இது 2009 தாக்குதலுக்குப் பின் மீண்டும் பாகிஸ்தானின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சந்தேகிக்க வைக்கிறது.

இதையும் படிங்க: டெல்லி குண்டு வெடிப்பின் பகீர் பின்னணி... கோயில் பிரசாதங்களை வைத்து போட்ட மாஸ்டர் பிளான் அம்பலம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share