×
 

அசிம் முனீருக்கு கூடுதல் அதிகாரம்.. பாகிஸ்தானில் அமலுக்கு வந்த புதிய ராணுவ சட்டங்கள்!!

பிரதமரின் முதன்மை ராணுவ ஆலோசகராக அசிம் முனீர் செயல்படுவார்.

பாகிஸ்தானின் ராணுவ அமைப்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பீல்டு மார்ஷல் அசிம் முனீர் இப்போது நாட்டின் மூன்று படைகளையும் ஒரே கட்டளையின் கீழ் வைத்துள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு அவருக்கு வழங்கப்பட்ட பீல்டு மார்ஷல் பதவிக்கு மேலும் சட்டப்பூர்வ ஆதரவு கிடைத்துள்ளது.

நேற்று (ஆகஸ்ட் 20, 2026) பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ‘பாதுகாப்புப் படைகள் சட்டம், 2026’ மற்றும் ‘தேசிய கட்டளை ஆணைய திருத்தச் சட்டம்’ ஆகியவை நிறைவேற்றப்பட்டன. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையிலும் இந்த சட்டங்கள் பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டன. இதன் மூலம் தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகியவை அசிம் முனீரின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன.

புதிய சட்டங்களின்படி பாதுகாப்புப் படைகள் தலைமையகம் உருவாக்கப்பட்டு, அதன் சுப்ரீம் கமாண்டராக முனீர் செயல்படுவார். நாட்டின் பாதுகாப்பு, ராணுவ விவகாரங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் அவர் பிரதமரின் முதன்மை ராணுவ ஆலோசகராகவும் பொறுப்பேற்கிறார். ராணுவ ஆட்சேர்ப்பு, குறைப்பு, ஓய்வு, பணிநீட்டிப்பு, ஓய்வூதிய வரம்பு மாற்றம் உள்ளிட்ட அனைத்து பணியாளர் விவகாரங்களிலும் அவருக்கு முழு அதிகாரம் உண்டு. மூத்த அதிகாரிகள் மற்றும் வீரர்களின் நியமனம், விடுவிப்பு போன்றவையும் அவரது கையில் உள்ளன.

இதையும் படிங்க: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்... திடீரென பல்டி அடித்த பாகிஸ்தான்? இந்திய ஆதரவாளர்கள் என குற்றச்சாட்டு!

இந்த மாற்றங்கள் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட 27வது அரசியலமைப்புத் திருத்தத்தின் தொடர்ச்சியாகும். அந்தத் திருத்தம் மூலம் ஜாயிண்ட் சீஃப்ஸ் ஆஃப் ஸ்டாஃப் கமிட்டி தலைவர் பதவி ஒழிக்கப்பட்டு, பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி (சி.டி.எஃப்) பதவி உருவாக்கப்பட்டது. அசிம் முனீர் இப்போது ராணுவத் தலைமைத் தளபதி மற்றும் சி.டி.எஃப் ஆகிய இரு பொறுப்புகளையும் வகிக்கிறார். தேசிய மூலோபாய கட்டளைத் தளபதி பதவியும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சட்டங்களை அமல்படுத்துவதில் முரண்பாடுகள் எழுந்தால் குடியரசுத் தலைவர் தலையிடும் அதிகாரம் உள்ளது. 

பாகிஸ்தானின் வரலாற்றில் ராணுவம் பலமுறை ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இப்போது ஒரே நபரின் கைகளில் இத்தகைய அதிகாரங்கள் குவிக்கப்படுவது ஜனநாயக அமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். நாட்டின் நிர்வாகத்திலும் முனீரின் செல்வாக்கு ஏற்கனவே அதிகமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த புதிய சட்டங்கள் அவரது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: “இனி பாகிஸ்தான் மீது கைவைத்தால் நாங்க இறங்கி அடிப்போம்...” - சவுதி, துருக்கி செயலால் இந்தியாவிற்கு ஆபத்தா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share