×
 

ஆப்பு வைக்கும் ஈரான் போர்..!! பெட்ரோல், டீசல் தாறுமாறு உயர்வு..!! கதிகலங்கும் மக்கள்..!!

பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை சுமார் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள கடுமையான மோதல் உலக அளவில் எண்ணெய் சந்தையை பெரிதும் பாதித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நடத்திய தாக்குதலில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரான் தரப்பில் இருந்து அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

இதனால் பிராந்தியத்தில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்த மோதலின் விளைவாக, உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹர்மூஸ் ஜலசந்தி ஈரான் தரப்பில் மூடப்பட்டுள்ளது. உலகின் சுமார் 20 சதவீத கச்சா எண்ணெய் இந்த ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இப்போது கப்பல்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், சர்வதேச சந்தைக்கு எண்ணெய் வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது.

இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. பல நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலைகளும் பெருமளவு அதிகரித்துள்ளன. உலக நாடுகள் பலவும் இந்த மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், தாக்குதல்கள் தொடர்வதால் பதற்றம் குறையவில்லை.

இதையும் படிங்க: ஈரான்-அமெரிக்கா போர் மேகம் விலகுமா? பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி பேச்சுவார்த்தை!

இந்த நிலையில், எண்ணெய் இறக்குமதியில் பெரிதும் சார்ந்துள்ள நாடுகள் கடுமையான பொருளாதார அழுத்தத்தை எதிர்கொள்கின்றன. பாகிஸ்தானும் இதன் தாக்கத்திலிருந்து தப்பவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பாகிஸ்தான் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது. இன்று முதல் அமலுக்கு வரும் இந்த உயர்வின்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 137 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 458 ரூபாயாகவும், டீசல் விலை 185 ரூபாய் உயர்த்தப்பட்டு 520 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது பாகிஸ்தான் ரூபாயில் குறிப்பிடப்பட்டுள்ள விலையாகும். இந்த திடீர் விலை உயர்வு பாகிஸ்தான் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுப் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து உள்ளிட்டவற்றின் செலவு அதிகரிப்பதால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. பாகிஸ்தான் அரசு ஏற்கெனவே எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு அலுவலகங்களுக்கு நான்கு நாள் வாரம், பள்ளிகள் மூடல், பணியாளர்களுக்கு வீட்டிலிருந்து பணி உள்ளிட்ட நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

இந்த சூழலில், மத்திய கிழக்கு அமைதி மீட்டெடுக்கப்படாவிட்டால், உலகெங்கும் எரிபொருள் விலை உயர்வு மேலும் தீவிரமடையும் அபாயம் உள்ளது. பாகிஸ்தான் உள்ளிட்ட வளரும் நாடுகள் இந்த நெருக்கடியை சமாளிக்க கடும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். உலக சமூகம் இப்போது அமைதியான தீர்வுக்காக காத்திருக்கிறது.

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு SPY வேலை பார்த்த இந்திய விமானப்படை வீரர்..!! தட்டித்தூக்கிய அதிகாரிகள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share