×
 

இந்தியா - கனடா உறவில் புதிய விடியல்! பிரதமர் மார்க் கார்னி இந்தியா வருகை!

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) இன்று நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தடைந்தார். கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த ராஜதந்திரக் கசப்புகளைக் களைந்து, உறவைச் சீராக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது.

இன்று பிற்பகல் 3:15 மணிக்கு மும்பை விமான நிலையம் வந்தடைந்த மார்க் கார்னிக்கு, மகாராஷ்டிர மாநில அமைச்சர் ஜெய்குமார் ராவல் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மும்பையில் தங்கியிருக்கும் முதல் இரண்டு நாட்களில், அவர் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ-க்கள் மற்றும் கனடா ஓய்வூதிய நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பதே இதன் முக்கிய இலக்காகும்.

மார்ச் 2-ஆம் தேதி புது தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, மார்க் கார்னி சந்திக்கிறார். இந்தச் சந்திப்பின் போது எரிசக்தி, குறிப்பாக அணுசக்தி மற்றும் யுரேனியம் கொள்முதல், செயற்கை நுண்ணறிவு (AI), வேளாண்மை மற்றும் கல்வி ஆகிய துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. ஜஸ்டின் ட்ரூடோ காலத்துச் சிக்கல்களைக் கடந்து, ஒரு நடைமுறைச் சாத்தியமான உறவை வளர்க்க இரு நாடுகளும் முன்வந்துள்ளன. குறிப்பாக, தீவிரவாதம் மற்றும் திட்டமிடப்பட்டக் குற்றங்களைத் தடுக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான 'விரிவான அதிரடித் திட்டம்' குறித்து இந்தச் சந்திப்பில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: டெல்லி - மீரட் நமோ பாரத் சேவை... இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து தொழில் அதிபர்களைச் சந்திக்க உள்ளனர். இது தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கவும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரப் பிணைப்பை வலுப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, ஆசியாவின் வளர்ந்து வரும் சக்தியான இந்தியாவுடன் கைகோர்க்க கனடா எடுத்துள்ள இந்த 'பிராக்மாடிக்' (Pragmatic) முடிவு, சர்வதேச அரசியலில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: தோல்வி பயத்தில் மாநில சுயாட்சி பேசும் ஸ்டாலின்.... தமிழிசை சவுந்தரராஜன் கடும் விமர்சனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share