சிங்கங்களின் தாயகம்!! வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன்! எத்தியோப்பியாவில் மோடி புகழாரம்!
''எத்தியோப்பியாவும், எனது சொந்த மாநிலமான குஜராத்தும் சிங்கங்களின் தாயகமாக இருப்பதால், வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
எத்தியோப்பியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பார்லிமென்ட்டின் கூட்டுக் கூட்டத்தில் உறுப்பினர்களை உரையாற்றினார். இந்த உரை இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்பு, கலாசாரத் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.
பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கிய போதே, எத்தியோப்பியாவையும் தனது சொந்த மாநிலமான குஜராத்தையும் சிங்கங்களின் தாயகமாகக் குறிப்பிட்டு உருக்கமான தொடக்கத்தை அளித்தார். “இந்திய மக்களின் சார்பாக உங்கள் முன் நிற்பது எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். சிங்கங்களின் பூமியான எத்தியோப்பியாவில் இருப்பது மிகவும் சிறப்பானது. நான் வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன். எனது சொந்த மாநிலமான குஜராத்தும் ஆசிய சிங்கங்களின் ஒரே தாயகமாகும்” என்று கூறினார்.
மேலும், இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ மற்றும் எத்தியோப்பியாவின் தேசிய கீதம் இரண்டும் நமது நிலத்தைத் ‘தாய்’ என்று போற்றுவதாகச் சுட்டிக்காட்டினார். “இரு பாடல்களும் நமது பாரம்பரியம், கலாசாரம், அழகு ஆகியவற்றில் பெருமை கொள்ளத் தூண்டுகின்றன. தாயகத்தைப் பாதுகாக்கவும் உறுதியளிக்கின்றன” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தாயின் மணிக்கொடி பாரீர்! பார்லி-யில் ஒலித்த தமிழ்!! பிரதமர் மோடி கவுரவம்!
இந்திய நிறுவனங்கள் எத்தியோப்பியாவில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களாகத் திகழ்வதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, “140 கோடி இந்திய மக்களின் சார்பாக நட்பு மற்றும் சகோதரத்துவ வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
எத்தியோப்பியாவின் உயரிய விருதான ‘தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா’ விருதைப் பெற்றதில் பெருமை அடைவதாகவும், இந்திய மக்களின் சார்பாக கூப்பிய கரங்களுடன் பணிவுடன் ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார்.
இந்தியா-எத்தியோப்பியா இடையே வலுவான உறவுகள் உள்ளதாகவும், எத்தியோப்பியாவின் மாபெரும் பார்லிமென்ட் கட்டடத்தில் மக்களின் விருப்பம் அரசின் விருப்பமாக மாறுவதாகவும் தெரிவித்தார். “அரசின் விருப்பம் மக்களின் விருப்பத்துடன் இணைந்தால், திட்டங்களின் பலன் எளிதில் மக்களைச் சென்றடையும்” என்று வலியுறுத்தினார்.
பிரதமர் மோடியின் இந்த உரை எத்தியோப்பிய உறுப்பினர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில் இப்பயணம் அமைந்துள்ளது.
எத்தியோப்பியாவில் இந்தியர்களின் பங்களிப்பு மிகுந்த பாராட்டைப் பெற்று வரும் நிலையில், பிரதமர் மோடியின் உரை இரு நாடுகளின் கலாசார மற்றும் உணர்வுப் பிணைப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: லோக்சபாவில் இன்று 10 மணி நேர விவாதம்! மோடி மாஸ்டர் ஸ்ட்ரோக்! அனல் பறக்கப் போவது கன்பார்ம்!