வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேறும் இந்தியா!! பிரதமர் மோடி பெருமிதம்!
4 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ''இந்தியா வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது'' என தெரிவித்தார்.
இந்தியாவின் ரயில்வே துறை மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. இன்று (நவம்பர் 8 ஆம் தேதி) காலை, பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து நான்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார்.
இந்த ரயில்கள் எர்ணாகுளம்-பெங்களூரு, பிரோஸ்பூர்-டில்லி, லக்னோ-ஷஹாரான்பூர், பனாரஸ்-கஜூராஹோ ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் பயணிகளுக்கு விரைவான, வசதியான போக்குவரத்து வசதி கிடைக்கும் என்பதால், பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “புதிய வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவின் வளர்ச்சி பாதையை வேகப்படுத்தும். உள்கட்டமைப்பு வளர்ச்சி என்பது பாலங்கள், நெடுஞ்சாலைகளுடன் மட்டும் நின்று விடாது. இது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: சத்தீஸ்கர் ரயில் விபத்து- 11ஆக உயர்ந்த பலி! எப்படி நடந்தது ஆக்சிடெண்ட்! ரயில்வே விளக்கம்!
மேலும், வந்தே பாரத், நமோ பாரத், அமிர்த பாரத் போன்ற ரயில்கள் புதிய தலைமுறை ரயில்வேக்கு அடித்தளம் அமைப்பதாகவும், உத்தரபிரதேசத்தில் கடந்த 11 ஆண்டுகளில் நடைபெற்ற வளர்ச்சி புனித யாத்திரைத் தலங்களை செழிப்பாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். வாரணாசி போன்ற இடங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பங்களிப்பு செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்த வந்தே பாரத் ரயில்கள் ;
1. எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத்: இந்த ரயில் திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ஏழு நிலையங்களில் நின்று செல்லும். கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் இது, ஐடி நிபுணர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு பயனளிக்கும். பயண நேரம் 8 மணி நேரம் 40 நிமிடங்களாக குறைவதால், வணிக வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். இந்த ரயிலில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி குழந்தைகளுடன் உரையாடி சாக்லேட் வழங்கினார்.
2. பனாரஸ் - கஜூராஹோ வந்தே பாரத்: உத்தரபிரதேசத்தின் பனாரஸ் (வாரணாசி) முதல் மத்திய பிரதேசத்தின் கஜூராஹோ வரை இயக்கப்படும் இந்த ரயில், பிரயாக்ராஜ், சித்ரகூடம் வழியாகச் செல்லும். மதம் மற்றும் கலாசார சுற்றுலாவை ஊக்குவிப்பதோடு, பக்தர்களுக்கு விரைவான பயண வசதியை ஏற்படுத்தும்
3. லக்னோ - ஷஹாரான்பூர் வந்தே பாரத்: லக்னோ முதல் ஷஹாரான்பூர் வரை இயக்கப்படும் இந்த ரயில், சீதாபூர், ஷாஜஹான்பூர், பைரேலி, மொராதாபாத், பிஜ்னூர் ஆகிய இடங்களில் நிற்கும். பயண நேரம் ஒரு மணி நேரம் குறைவதால், உத்தரபிரதேசத்தின் உள்ளூர் பொருளாதாரம் ஊக்கமடையும்.
4. பிரோஸ்பூர் - டில்லி வந்தே பாரத்; பஞ்சாபின் பிரோஸ்பூர் முதல் தில்லி வரை இயக்கப்படும் இந்த ரயில், பயண நேரத்தை 6 மணி நேரம் 40 நிமிடங்களாக குறைக்கும். வர்த்தகம், சுற்றுலா, வேலைவாய்ப்புகளை அதிகரித்து, சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும்.
இந்த நான்கு ரயில்களும் வந்தே பாரத் தொடரின் சிறப்பம்சங்களான உயர் வேகம், நவீன வசதிகள், பாதுகாப்பு ஆகியவற்றை கொண்டுள்ளன. இந்திய ரயில்வேயின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இவை, நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியை வேகப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
இதையும் படிங்க: ரூ.659 கோடி பட்ஜெட்! குவியும் ஹை டெக் ஆயுதங்கள்! அப்டேட்டாகும் இந்திய ராணுவம்!