×
 

தலைவிரித்தாடும் தட்டுப்பாடு.. ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி... இந்திய கப்பல்களுக்கு வழி பிறக்குமா?

இந்திய கொடி பறக்கும் கப்பல்கள் அந்த வழியாக அனுமதிக்கப்படுவதாக வெளியான தகவலை ஈரான் மறுத்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் கூட்டுத்தாக்குதலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும்  கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. உலகின் மிக முக்கியமான கப்பல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் இந்தியாவில் கடுமையான கேஸ் மற்றும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால் நேற்றைய தினம் இந்தியக் கொடியுடன் கூடிய வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்வதற்காக இந்தியா ஈரானுடன் தொடர்பில் இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய கொடி பறக்கும் கப்பல்கள் அந்த வழியாக அனுமதிக்கப்படுவதாக வெளியான தகவலை ஈரான் மறுத்துள்ளது.

நூற்றுக்கணக்கான இந்திய மாலுமிகளுடன் 24 இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் தற்போது ஜலசந்தியின் மேற்கே இருப்பதாகவும், இந்தியக் குழுவினருடன் மேலும் நான்கு கப்பல்கள் மூலோபாய நீர்வழிப்பாதையின் கிழக்கே நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கப்பல்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இத்தகைய பதற்றமான சூழ்நிலைகளுக்கு இடையில், பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். 

இதையும் படிங்க: விவசாய நண்பன் போல் கபட நாடகம்... பிரதமரை வறுத்தெடுத்த அமைச்சர் ரகுபதி..!!

ஈரானில் பதட்டங்கள் அதிகரிப்பது குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதாகவும், உயிரிழப்புகள், உட்கட்டமைப்புகள் சிதைக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்த பிரதமர், இந்தியாவின் முதன்மையான முன்னுரிமைகள் அதன் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் தடையற்ற எரிசக்தி விநியோகம் குறித்தும் பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது "பிராந்தியத்தில் நிலவும் கடுமையான நிலைமை குறித்து விவாதிக்க ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெஷேஷ்கியனுடன் உரையாடினேன். பதற்றம் அதிகரிப்பது, பொதுமக்களின் உயிர் இழப்பு மற்றும் பொதுமக்களின் உள்கட்டமைப்புக்கு ஏற்படும் சேதம் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினேன். இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் பொருட்கள் மற்றும் எரிசக்தியின் தடையற்ற போக்குவரத்தின் தேவை ஆகியவற்றுடன், இந்தியாவின் முதன்மையான முன்னுரிமைகளாக உள்ளன. அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் ராஜதந்திர தீர்வுகளுக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் நெருக்கடியைத் தீர்க்க அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தினேன்” எனக்குறிப்பிட்டுள்ளார். 

பிரதமர் மோடியே நேரடியாக ஈரான் அதிபரிடம் பேசியதை அடுத்து ஹார்முஸ் நீரிணை வழியாக கடந்து செல்ல இந்திய கொடி கட்டிய கப்பல்களுக்கு அனுமதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

 

இதையும் படிங்க: சிலிண்டர் தட்டுப்பாடு..! பதறாதீங்க... பொது மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share