ரூ.48,000 கோடி முதலீடு!! ஐக்கிய அரசு எமிரேட்சில் கலக்கிய மோடி! முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தில் எரிசக்தி தேவையில் ஒத்துழைப்பு மற்றும் இந்தியாவின் உட்கட்டமைப்பு, நிதித்துறை ஆகியவற்றில் 48,000 கோடி ரூபாய் முதலீடு ஆகிய முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் நரேந்திர மோடி தனது ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு (UAE) நேற்று சென்றார். அங்கு UAE அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் நடத்திய உயர்மட்ட சந்திப்பில் எரிசக்தி, ராணுவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் இந்தியாவில் ₹48,000 கோடி முதலீடு செய்ய UAE முன்வந்துள்ளது மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
விமான நிலையத்திலேயே அதிபர் அல் நஹ்யான் நேரில் வந்து பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார். இரு தலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார்.
சமீபத்தில் UAE மீது நடைபெற்ற தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. ஈரான் போர் காலத்தில் இந்தியர்களுக்கு UAE அளித்த பாதுகாப்புக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்திய மக்களுக்கு கிடைத்த கவுரவம்!! ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!
இந்த சந்திப்பின் முக்கிய பலனாக பல ஒப்பந்தங்கள் உருவாகின. ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் பயிற்சி மட்டுமின்றி, பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இணைந்து உருவாக்குவதும் உற்பத்தி செய்வதும் இடம் பெற்றுள்ளது. உளவுத்தகவல் பகிர்வு, கடல் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய துறைகளிலும் ஒத்துழைப்பு வலுப்பெறும்.
எரிசக்தி துறையில் மிக முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சேமிப்பு திறனை 3 கோடி பீப்பாய்களாக உயர்த்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை இந்தியாவின் ISPRL நிறுவனம் நிர்வகிக்கும். இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் சமையல் எரிவாயு வினியோகத்துக்கான நீண்டகால ஒப்பந்தமும் முடிவானது.
குஜராத்தின் வாடினாரில் புதிய கப்பல் பழுதுபார்க்கும் மையம் அமைக்க உடன்பாடு ஏற்பட்டது. ‘மைத்ரி’ என்ற டிஜிட்டல் வர்த்தக வழித்தடம் தொடங்கப்பட்டது. இது சரக்கு போக்குவரத்தின் செலவு மற்றும் நேரத்தை பெரிதும் குறைக்கும். தொழில்நுட்பத் துறையில் அதிநவீன சூப்பர் கம்ப்யூட்டர் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துக்கு பெரும் ஊக்கம் அளிக்கும்.
முதலீட்டு ஒப்பந்தங்களின்படி, RBI வங்கியில் ₹28,800 கோடி, உட்கட்டமைப்பு திட்டங்களில் ₹9,600 கோடி மற்றும் சம்மான் கேபிடல் நிறுவனத்தில் ₹9,600 கோடி என மொத்தம் ₹48,000 கோடி UAE முதலீடு செய்ய உள்ளது.
இரண்டரை மணி நேர பயணத்துக்குப் பின் பிரதமர் மோடி நெதர்லாந்து நோக்கி புறப்பட்டார். இந்த சுற்றுப்பயணம் இந்தியாவின் வெளியுறவு மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்திய மக்களுக்கு கிடைத்த கவுரவம்!! ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!