அதிகாலை முதலே பரபரப்பு... ரிப்பன் மாளிகை முன்பு போலீசார் குவிப்பு... காரணம் என்ன?
இன்று அதிகாலை முதலே ரிப்பன் மாளிகையைச் சுற்றி 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகை முன்பு பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 13 நாட்களுக்கும் மேலாக அவர்களது போராட்டம் நீடித்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி நள்ளிரவில் தூய்மை பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
500க்கும் மேற்பட்டோர் தூய்மை பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட நிலையில், பலரும் போலீசாரால் தாக்குதலுக்கு ஆளானதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. வாகனங்களில் ஏற மறுத்த துப்புரவு பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக தர, தரவென இழுத்துச் சென்றனர். இதனால் சில பெண் துப்புரவு பணியாளர்கள் மயக்கமடைந்தனர்.
கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை தனித்தனியாக 4 இடங்களில் அடைத்து வைத்து போலீசார் மிரட்டியதாகவும், இனி போராட்டத்தில் ஈடுபடமாட்டோம் என வாக்குறுதி கொடுத்தால் மட்டுமே வெளியே விடுவோம் எனக்கூறியதாகவும் கூறப்பட்டது. மேலும் ரிப்பன் மாளிகை முன்பு இனி போராட்டம் நடத்தக்கூடாது, அது போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட இடமில்லை என சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: மேயர் பிரியாவுக்கு ஏதாச்சு பேச தெரியுதா? சேகர்பாபுவ நாங்க கேட்டோமா? கொந்தளித்த தூய்மை பணியாளர்கள்
இதனிடையே, தூய்மை பணியாளர்களுக்கு முதலமச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். அதனையடுத்து சுதந்திர தினத்தன்று முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தூய்மை பணியாளர்கள் பதாகைகளை ஏந்தி ஊர்வலம் சென்றதாக செய்திகள் வெளியாகின. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களோ, “எங்களை கைது செய்து அடித்து துன்புறுத்தினார்கள். அப்படியிருக்கையில் நாங்கள் ஏன் நன்றி சொல்லப்போகிறோம். மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை முதலே ரிப்பன் மாளிகையைச் சுற்றி 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்ற தகவல் வெளியானதை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: வரலாற்றில் முதன்முறை!! துணை ஜனாதிபதி தேர்தலின் சிறப்பம்சங்கள்!! ஏற்பாடுகள் தீவிரம்!