"ஜப்பானை உலுக்கிய 7.1 ரிக்டர் நிலநடுக்கம்.. கட்டிடங்கள் சேதம், 1 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை!
ஜப்பானின் கியூஷு தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதில் கட்டடங்கள் சேதமடைந்து, 1 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் தென் பகுதியிலுள்ள கியூஷு தீவின் குமமோட்டோ (Kumamoto) பகுதியில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, அப்பகுதிக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் காரணமாகக் கட்டிடங்கள் இடிந்து விழுந்து சிலர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த நிலநடுக்கமானது கடல் பரப்பிற்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து குமமோட்டோ, நாகசாகி, ககோஷிமா, ஃபுகுவோகா, சகா உள்ளிட்ட கியூஷு தீவின் பல்வேறு மாகாணங்களுக்கு அவசரகால நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கடலோரப் பகுதிகளுக்கு 1 மீட்டர் (3.28 அடி) உயரம் வரை சுனாமி அலைகள் எழக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், தாழ்வான மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக மேடான பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நிலநடுக்கத்தால் குலுங்கிய நியூசிலாந்து..!! ரிக்டர் அளவு 6.3-ஆக பதிவு..!! சுனாமி எச்சரிக்கை..!!
இச்சம்பவம் குறித்துப் பிரதமர் சாநே தகைச்சி (Sanae Takaichi) கூறுகையில், "பொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பதே அரசின் முதன்மை இலக்கு. அவசரகால மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், சேத மதிப்புகளை விரைந்து கணித்து உதவி வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அப்பகுதியில் உள்ள அணுமின் நிலையங்களில் உடனடியாக எந்தவொரு பாதிப்பும் அல்லது அசாதாரணச் சூழலும் பதிவாகவில்லை என அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் உறுதி செய்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் புல்லட் ரயில் மற்றும் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஆய்வுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்... "மக்கள் அச்சப்பட வேண்டாம்" - மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!