ஆவினை விட 55% அதிக விலை..! தனியார் பால் நிறுவனங்களுக்கு திமுக அரசு துணை போவதாக அன்புமணி புகார்!
தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு ₹10 வரை உயர்த்தியுள்ளதைக் கண்டித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் காரசாரமான பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் வரை உயர்த்தியுள்ளதற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில், திமுக அரசின் மெத்தனப் போக்கே இத்தகைய விலையேற்றத்திற்குக் காரணம் எனச் சாடியுள்ளார்.
தனியார் பால் விலையேற்றம்: சாதாரண மக்கள் பயன்படுத்தும் 3% கொழுப்புச் சத்து கொண்ட நீல உறை பாலின் விலை லிட்டருக்கு ₹52-லிருந்து ₹62-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் பச்சை உறை பால் ₹68-ஆகவும், ஆரஞ்சு உறை பால் ₹76-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆவின் vs தனியார்: ஆவினில் ₹40-க்கு விற்கப்படும் நீல உறை பால், தனியாரில் ₹22 கூடுதலாக விற்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஆவின் விலையை விடத் தனியார் பால் விலை 55% அதிகமாக உள்ளது. அதாவது தனியாரில் 2 லிட்டர் வாங்கும் விலையில் ஆவினில் 3 லிட்டர் வாங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 8-வது முறையாகத் தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் 55% விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க வேண்டிய அரசு, கமிஷன் மற்றும் கரப்ஷன் கொள்கைக்காகத் தனியார் நிறுவனங்களின் கொள்ளைக்குத் துணை போகிறது" என அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாமக-வின் பரிந்துரைகள்: பால் விலையைக் கட்டுப்படுத்த இரு முக்கிய வழிகளை அவர் முன்மொழிந்துள்ளார்.
இதையும் படிங்க: விவசாய வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்க கூடாது... சௌமியா அன்புமணி கோரிக்கை!
பால் விலை ஒழுங்குமுறை ஆணையம்: உற்பத்திச் செலவைக் கணக்கிட்டு விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். ஆவின் சந்தைப் பங்கை அதிகரித்தல்: தற்போது 16% மட்டுமே உள்ள ஆவின் பங்களிப்பை 50%-ஆக உயர்த்தினால் மட்டுமே தனியார் ஆதிக்கத்தைத் தடுக்க முடியும்.
மக்களைச் சுரண்டும் தனியார் நிறுவனங்களுடன் பேசி, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற செய்ய வேண்டும்; இல்லையெனில் மக்கள் திமுக-வைத் தண்டிப்பார்கள் என அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: பா.ம.க. தேர்தல் அறிக்கை... 7 பேர் கொண்ட வலுவான குழுவை அமைத்தார் அன்புமணி ராமதாஸ்!