ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை நேரில் சந்தித்து பிராந்திய போர் பதற்றங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையேயான சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர்ச் சூழலுக்கு மத்தியில் நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பு, சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அப்பாஸ் அராக்சி, "ஈரான் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தீர்க்க கிரெம்ளின் மாளிகை வழங்கிய யோசனைகள் மிகவும் சிறப்பானவை; இது தெஹ்ரான் மற்றும் மாஸ்கோ இடையிலான ஒத்துழைப்பிற்கு ஒரு சிறந்த அடிப்படையாக அமையும்," என்று குறிப்பிட்டார். போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான விட்டுக்கொடுப்புகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து ஈரான் தலைமையிலான உயர்மட்டக் குழுவினரிடையே இருவேறு கருத்துகள் நிலவி வரும் சூழலில், ரஷ்யாவின் இந்தத் தலையீடு ஈரானுக்குப் பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது.
மறுபுறம், இந்தச் சந்திப்புக் குறித்து அமெரிக்கா எவ்வித எதிர்மறையான நிலைப்பாட்டையும் (Negative Signals) வெளிப்படுத்தவில்லை என ரஷ்ய அதிபரின் ஆலோசகர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார். "ஈரான் மோதலைத் தீர்ப்பதில் ரஷ்யாவின் உறுதிப்பாட்டைக் கருத்தில் கொண்டு, அராக்சியைச் சந்திப்பது சாதாரண இராஜதந்திர வேலையின் ஒரு பகுதியே. இதை யாரும் தவறாகப் பார்க்கவில்லை," என அவர் விளக்கமளித்தார். அதே வேளையில், ஈரானின் பொருளாதார முடக்கத்தைச் சமாளிக்க, தனது நிலப்பரப்பு வழியாக மூன்றாம் நாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது ஈரானுக்குக் கிடைத்துள்ள மற்றொரு வெற்றியாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: ஈரானுக்கு விமான பயணம்: இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் கடும் எச்சரிக்கை!
இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணை எங்கள் வசம்! ஈரானை எச்சரித்து டொனால்ட் டிரம்ப் பதிவு!