×
 

இந்தியாவின் உரப் பிரச்னையை தீர்ப்போம்! பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் கொடுத்த முக்கிய உறுதி!

இந்தியா–ரஷ்யா உறவுகளின் வளர்ச்சியை பிரதமர் மோடி தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், இந்த உறவை முன்னெடுப்பதில் மோடியின் பங்கு முக்கியமானது என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உரத் தேவையை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரஷ்யா மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இந்திய விவசாயிகளுக்கும், நாட்டின் வேளாண்மைத் துறைக்கும் உர விநியோகம் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய ரஷ்யா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

ரஷ்யா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரஷ்ய அதிபர் புடினை சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செய்தியை புடினிடம் அவர் வழங்கினார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திப்புக்குப் பின்னர் பேசிய புடின், இந்தியாவுடனான வர்த்தகம் மற்றும் எரிசக்தித் துறையில் வளர்ந்து வரும் உறவுகளுக்கு ரஷ்யா முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்தார். குறிப்பாக இந்தியாவின் உரத் தேவையை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: எங்களை சுட்டு கொன்றாலும் சரி...வந்தே மாதரம் பாடலுக்கு எதிராகக் கொந்தளித்த காங்கிரஸ் எம்.பி.!

ரஷ்யா தனது ஏற்றுமதியை தொடர்ந்து விரிவுபடுத்தி வருவதாகவும், எதிர்காலத்திலும் அதனைத் தொடர தயாராக இருப்பதாகவும் புடின் கூறினார். அணுசக்தி மற்றும் உயர் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா–ரஷ்யா இடையிலான ஒத்துழைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் சிறிய சரிவு ஏற்பட்டிருந்தாலும், தற்போது மீண்டும் வர்த்தகம் அதிகரித்து வருவதாக புடின் குறிப்பிட்டார். மேலும், இந்தியா–ரஷ்யா உறவுகளின் வளர்ச்சியை பிரதமர் மோடி தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், இந்த உறவை முன்னெடுப்பதில் மோடியின் பங்கு முக்கியமானது என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடின் அடுத்த மாதம் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாக, ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடியும் புடினும் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, செப்டம்பர் 12ம் தேதி பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக புடின் இந்தியா வர உள்ளார்.

இந்தியாவின் உர விநியோகம், எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இந்த சந்திப்புகளிலும் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அமித் ஷா தலைமையில் நாளை தொடங்கும் முக்கிய மாநாடு! டெல்லியில் குவியும் 850 பாதுகாப்பு அதிகாரிகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share