மிரட்டப்போகுது மழை... உஷார் மக்களே... 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...!
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவிழந்துவிட்டதாகவும், மேலும் வலுவிழக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாளை மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 24 ஆம் தேதி ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 26 ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.